திருக்கோவிலில் நெல் கொள்வனவில் தராசு மோசடி அம்பலம்; விவசாயிக்கு ரூ.2.5 இலட்சம் இழப்பு தவிர்ப்பு!
திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் நெல் கொள்வனவின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் தராசு மோசடி, பிரதேச சபை தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் மற்றும் அதிகாரிகளின் துரித தலையீட்டின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நெல் மூடைகளை விற்பனை செய்வதற்காக எடைபோட்டுக்கொண்டிருந்த விவசாயி ஒருவர், தராசின் அளவீட்டில் சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து பிரதேச சபை தவிசாளருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற தவிசாளர் மற்றும் அதிகாரிகள், பயன்படுத்தப்பட்ட தராசை பரிசோதித்தபோது அது தவறான அளவீட்டைக் காட்டியமை உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் குறித்த விவசாயிக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய சுமார் ரூ.2.5 இலட்சம் நிதி இழப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பிரதேச சபை தெரிவித்துள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய நெல் கொள்வனவாளர்கள் மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக திருக்கோவில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், நெல் விற்பனை செய்யும் போது பயன்படுத்தப்படும் தராசுகளின் அளவீடுகளை விவசாயிகள் கவனமாக சரிபார்க்குமாறும், தராசு மோசடி அல்லது சந்தேகத்திற்கிடமான சம்பவங்கள் தொடர்பில் 067 226 5018 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு உடனடியாக தகவல் வழங்குமாறும் திருக்கோவில் பிரதேச சபை கேட்டுக்கொண்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே