அமைச்சரவைப் பத்திரத்தில் சந்தேகம்: அவசர அரசியலமைப்புத் திருத்த முயற்சிக்கு 'தினன தகுண' கடும் கண்டனம்!
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கு அமைவாக அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள அவசர அரசியலமைப்புத் திருத்தத்துக்குத் தமது பலத்த எதிர்ப்பை தெரிவித்துக் கொள்வதாக ‘தினன தகுண - தென்னிலங்கை அரசியல் மறுவாழ்வுக்கான கூட்டமைப்பு’ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுத் தெரிவித்துள்ளது.
அந்த கூட்டமைப்பின் தலைமைத்துவ சபை மற்றும் செயற்குழுவின் கையொப்பத்துடன் இன்றைய தினம் (4) இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பான கருத்துருத் தாள் எதுவுமே தமக்குக் கிடைக்கவில்லை என்றும், அவ்வாறான அமைச்சரவைப் பத்திரத்தை தாம் தயாரிக்கவில்லை என்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி அயேஷா ஜினசேன தெரிவித்துள்ளார்.
இதனூடாக உரிய அமைச்சைத் தவிர்த்து வேறு தரப்பினரால் இந்த அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதா என்ற நியாயமான சந்தேகம் இதன் மூலம் எழுவதாக 'தினன தகுண' கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ராஜீவ் அமரசூரிய, மல்வத்து பீட மகாநாயக்க தேரரைச் சந்தித்த பின்னர் செய்த பிரசாரத்தின் மூலமும் இந்த சந்தேகம் மேலும் உறுதிப்படுத்தப்படுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள இந்த அரசியலமைப்புத் திருத்தத்துக்கு எதிராக முப்பீட மகாநாயக்க தேரர்களின் எதிர்ப்பைத் தெரிவித்து ஜனாதிபதிக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மல்வத்து பீட மகாநாயக்க தேரர் அறிவித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய அரசியலமைப்பொன்றை அறிமுகப்படுத்துவதாக மக்களுக்கு வாக்களித்துவிட்டு, இவ்வாறு அவசரமாக அரசியலமைப்புத் திருத்தமொன்றை மேற்கொள்வதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சியை அருவருப்புடன் கண்டிப்பதாகவும் அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே