கையில் தேசிய அடையாள அட்டை இல்லை என்பதற்காக ஒருவரை கைது செய்ய முடியுமா?
கையில் தேசிய அடையாள அட்டை இல்லை என்பதற்காக ஒருவரை கைது செய்ய முடியுமா?
இலங்கைச் சட்ட விளக்கங்கள்:
பொதுமக்கள் பொது இடங்களில் நடமாடும் போது தேசிய அடையாள அட்டையை (NIC) உடன் வைத்திருக்கத் தவறினால், பொலிஸார் உடனடியாக அவர்களைக் கைது செய்ய முடியும் என்ற ஒரு அச்சமும் தவறான புரிதலும் பரவலாகக் காணப்படுகிறது.
ஆனால், இலங்கையின் தற்போதைய சட்ட விதிகளின்படி, அடையாள அட்டை கைவசம் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக ஒருவரைப் பொலிஸாரால் நேரடியாகக் கைது செய்ய முடியாது.
1968ம் ஆண்டின் 32 ஆம் இலக்க நபர்களைப் பதிவு செய்யும் சட்டம் மற்றும் இலங்கை பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் கீழ், கடமையில் இருக்கும் ஒரு பொலிஸ் அதிகாரிக்கு பொதுமக்களிடம் அடையாளத்தை விசாரிப்பதற்கான முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பு, குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் அல்லது ஏதேனும் குற்றப் புலனாய்வு விசாரணைகளின் போது, சம்பந்தப்பட்ட நபர் யார் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள பொலிஸார் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்துகின்றனர்.
தேசிய அடையாள அட்டை உடன் இல்லாதது சட்டப்படி ஒரு குற்றவியல் குற்றமாக கருதப்படாது என்றாலும், ஒரு நபர் மீது பொலிஸாருக்கு ஏற்கனவே ஏதேனும் ஒரு விவகாரத்தில் நியாயமான சந்தேகம் இருக்கும் பட்சத்தில், அவரிடம் அடையாள அட்டை இல்லாதது அந்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தும்.
இத்தகைய சூழ்நிலைகளில், குறிப்பிட்ட நபரின் நடத்தை மற்றும் சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் அடுத்தகட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு.
இலங்கை குற்றவியல் நடைமுறைச் சட்டக் கோவையின் (Criminal Procedure Code) 33 வது பிரிவின் கீழ், ஒரு நபர் ஏதேனும் ஒரு குற்றச் செயலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் போது, அவர் தனது பெயர் மற்றும் வசிப்பிட முகவரியைப் பொலிஸாரிடம் தெரிவிக்க மறுத்தால் அல்லது தவறான விபரங்களை வழங்கினால், பொலிஸார் அவரை வாரண்ட் (கைது ஆணை) இல்லாமலேயே கைது செய்ய முடியும்.
இந்த வகையான கைது நடவடிக்கை தண்டனை வழங்குவதற்காக அல்லாமல், அவரது உண்மையான அடையாளத்தை மற்றும் முகவரியை நீதிமன்றத்தின் முன் சரிபார்ப்பதற்காக மட்டுமே மேற்கொள்ளப்படும்.
விபரங்கள் துல்லியமாக உறுதி செய்யப்பட்டவுடன் அவர் பிணையில் விடுவிக்கப்பட வேண்டும்.
எனவே, பொதுமக்கள் பொது இடங்களுக்குச் செல்லும்போது தங்களின் தேசிய அடையாள அட்டை அல்லது செல்லுபடியாகும் ஏதேனும் ஓர் அடையாள ஆவணத்தை (ஓட்டுநர் உரிமம் அல்லது கட கடவுச்சீட்டு) உடன் வைத்திருப்பது, தேவையற்ற தாமதங்கள் மற்றும் சட்டச் சிக்கல்களைத் தவிர்ப்பதற்கு மிகவும் அவசியமானதாகும்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே