டெங்கு ஒழிப்பு அனைவரின் சமூகப் பொறுப்பு – நிந்தவூர் தவிசாளர் றியாஸ் ஆதம் வலியுறுத்தல்
அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நிந்தவூர் பிரதேச மட்ட டெங்கு ஒழிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (06.08.2026) நிந்தவூர் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எம். அப்துல் லதீப் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை அகற்றுதல், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் வீடுகளின் சுற்றுப்புறங்களை சுத்தமாக பராமரித்தல் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம், “டெங்கு ஒழிப்பு என்பது ஒரு திணைக்களத்தின் பொறுப்பு மட்டுமல்ல; அனைத்து தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டிய சமூகப் பொறுப்பு” என வலியுறுத்தினார்.
ஒவ்வொரு குடும்பமும் தமது வீடு மற்றும் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், வடிகால்கள் சுத்தம் செய்தல், திண்மக் கழிவுகளை அகற்றுதல், சுற்றுச்சூழல் சுகாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் சிரமதானப் பணிகளை முன்னெடுத்தல் போன்ற நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
எதிர்வரும் நாட்களில் பிரதேச செயலகம், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் நிந்தவூர் பிரதேச சபை இணைந்து அதிக அபாயம் உள்ள பகுதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தீர்மானித்துள்ளன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே