மக்களே அபிவிருத்தியை தீர்மானிக்கும் புதிய அரசியல் கலாச்சாரம் – பிரதியமைச்சர் பிரதீப்

#SriLanka #people #Minister #Lanka4 #Devolopment #ADDA #ADDAADS #SHELVA #ADDAPOOJA
Abi
56 minutes ago
மக்களே அபிவிருத்தியை தீர்மானிக்கும் புதிய அரசியல் கலாச்சாரம் – பிரதியமைச்சர் பிரதீப்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள், இன்று முரசுமோட்டை பகுதியில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் வட்டார சபை அமைத்தல் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

இதன்போது அவர், 2024ஆம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் மாற்றம் குறித்து குறிப்பிட்டதுடன், பாரம்பரிய குடும்ப அரசியலுக்கு மாற்றாக எளிய பின்னணியில் இருந்து வந்த ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதையும், நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 159 ஆசனங்களைப் பெற்று வரலாற்று வெற்றியை பதிவு செய்ததையும் சுட்டிக்காட்டினார்.

மேலும், ஆடம்பர வாகனப் பவனிகள், தேவையற்ற பாதுகாப்பு மற்றும் வீண் செலவுகளை தவிர்த்து எளிமையான அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் எனத் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல்கள் மற்றும் குற்றங்கள் தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

வட்டார சபைகள் மூலம் கிராமப்புற மற்றும் பிராந்திய அபிவிருத்திகளை மேலிருந்து தீர்மானிப்பதற்குப் பதிலாக, மக்களே தங்களது தேவைகளை அடையாளம் கண்டு அபிவிருத்தித் திட்டங்களை தீர்மானிக்கும் வாய்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

அதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாகுபாடின்றி வீடமைப்புத் திட்டங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை முற்றாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் தொடரும் எனவும் பிரதியமைச்சர் உறுதியளித்தார்.

இறுதியாக, உரிய சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4