“முயன்றால் எதுவும் முடியும்” – மாணவர்களுக்கு வடக்கு ஆளுநர் வேதநாயகன் அறிவுரை

#SriLanka #Student #Governor #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
“முயன்றால் எதுவும் முடியும்” – மாணவர்களுக்கு வடக்கு ஆளுநர் வேதநாயகன் அறிவுரை

கல்விக்கான உதவியே மனித வாழ்க்கையை மாற்றும் மிகப்பெரிய உதவி என வலியுறுத்திய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், “எங்களால் எதுவும் முடியாது என்றில்லை; முயன்றால் எதுவும் முடியும்” என்ற மனப்பாங்குடன் மாணவர்கள் தங்களது இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (08) கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக நடைபெற்ற இலவசக் கருத்தரங்கில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தின் கல்வி முன்னேற்றம் ஒவ்வொரு மாணவரின் அர்ப்பணிப்புடனும் தொடர்புடையது எனக் குறிப்பிட்ட ஆளுநர், “இந்த ஆண்டு வடக்கு மாகாணத்தை முன்னணிக்கு கொண்டு வருவோம்” என்ற உறுதியுடன் மாணவர்கள் பரீட்சை மண்டபத்துக்குள் செல்ல வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும், 16 வயது என்பது வாழ்க்கையின் முக்கியமான திருப்புமுனை எனத் தெரிவித்த அவர், நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுத்து, தவறான பழக்கவழக்கங்கள் மற்றும் நேரத்தை வீணடிக்கும் செயல்களில் இருந்து விலகுமாறும் அறிவுறுத்தினார்.

சமூக ஊடகங்களை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் காலவிரயம் எதிர்காலத்தைப் பாதிக்கக்கூடும் என்பதால், மாணவர்கள் தங்களது நேரத்தை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கமும் வடக்கு மாகாண நிர்வாகமும் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்காக பல்வேறு முதலீடுகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட ஆளுநர், பாடசாலைகள், ஆசிரியர்கள், நூல்கள் மற்றும் கல்வி வசதிகள் அனைத்தும் மாணவர்களின் வெற்றிக்காகவே வழங்கப்படுகின்றன என்றார்.

அதேவேளை, பெற்றோரின் தியாகங்களையும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும் மதித்து, கல்வியில் சிறந்து விளங்குவதன் மூலம் அவர்களின் உழைப்புக்கு மாணவர்கள் சிறந்த கைமாறு செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அதிக மதிப்பெண்கள் பெறுவது மட்டுமல்லாமல், நேர்மை, ஒழுக்கம், பொறுப்பு மற்றும் மனிதநேயத்துடன் கூடிய சிறந்த குடிமக்களாக உருவாகுவதே கல்வியின் உண்மையான நோக்கம் எனவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

இன்றைய மாணவர்களே நாளைய மருத்துவர்கள், பொறியியலாளர்கள், ஆசிரியர்கள், நீதிபதிகள் மற்றும் நாட்டை வழிநடத்தும் தலைவர்கள் எனத் தெரிவித்த அவர், பெரிய கனவுகளைக் கண்டு அவற்றை நனவாக்க விடாமுயற்சியுடன் உழைக்குமாறும் மாணவர்களை ஊக்குவித்தார்.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன், சட்டத்தரணி வே.தேவசேனாதிபதி, அனுசரணையாளர் நாகரத்தினம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டதுடன், பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் பங்கேற்றிருந்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4