பொலிஸ் மா அதிபர் குறித்த சர்ச்சைக் கருத்து: சாகர காரியவசம் கைது!
இலங்கை பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான சாகர காரியவசம் இன்று (10) காலை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் (CCIB) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தொடர்பில் அவர் வெளியிட்டதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய கருத்துகள் குறித்து முன்னெடுக்கப்படும் விசாரணைக்காக கொழும்பிலுள்ள CCIB-க்கு முன்னிலையானபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஒகஸ்ட் 3ஆம் திகதி பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த சாகர காரியவசம், தற்போதைய பொலிஸ் மா அதிபர் பொதுமக்களால் நடுவீதியில் தாக்கிக் கொல்லப்பட்ட 37ஆவது பொலிஸ் மா அதிபராக வரலாற்றில் இடம்பெறுவதைத் தாம் விரும்பவில்லை எனத் தெரிவித்திருந்தார்.
இந்தக் கருத்து பொலிஸ் மா அதிபரின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும், படுகொலைச் சதித்திட்டம் தொடர்பான மறைமுகக் குறிப்பாக இருக்கலாம் என்றும் அரசாங்கத் தரப்பிலிருந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இதனையடுத்து, குறித்த கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், சாகர காரியவசத்திற்கு எதிரான குற்றவியல் விசாரணைகளை முன்னெடுப்பதற்கான நீதிமன்ற அனுமதியும் பெறப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், தனது கருத்துக்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாகவும், தம்மை அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்தும் முயற்சி இடம்பெறுவதாகவும் சாகர காரியவசம் முன்னதாகக் கூறியிருந்தார்.
இந்தப் பின்னணியில், விசாரணைக்காக இன்று CCIB-க்கு முன்னிலையான சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே