மடு அன்னையின் ஆவணித் திருவிழா: 15 இலட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை எதிர்பார்ப்பு!
மன்னார் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா எதிர்வரும் 15ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், திருவிழா ஏற்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் மடு திருத்தலத்தில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை உள்ளிட்ட மதகுருமார்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைத் தலைவர்கள், இராணுவம், கடற்படை, பொலிஸ், வைத்தியர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இம்முறை நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் 15 இலட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் மடு திருத்தலத்திற்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து, சுகாதாரம், மருத்துவ வசதிகள், தங்குமிடம், குடிநீர், மின்சாரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. மேலும், திருவிழா காலத்தில் ஒருங்கிணைந்த திருட்டு மற்றும் பிச்சையெடுப்பு நடவடிக்கைகளைத் தடுப்பதற்கும், டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மடு புனித பிரதேசம் என்பதால் மதுபானம் மற்றும் போதைப்பொருட்களை கொண்டு வருவதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், சட்டத்தை மீறுவோருக்கு எதிராக உடனடி நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
எதிர்வரும் 12ஆம் திகதி முதல் மடு பகுதியில் நடமாடும் நீதிமன்றமும் செயற்படவுள்ளது. பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மற்றும் சட்டத்தை மீறுபவர்கள் மீது இதன் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
மடு அன்னையின் ஆவணித் திருவிழாவுக்கான கொடியேற்றம் கடந்த 6ஆம் திகதி இடம்பெற்ற நிலையில், தொடர்ந்து மாலை நவநாள் திருப்பலிகள் நடைபெற்று வருகின்றன.
எதிர்வரும் 14ஆம் திகதி மாலை வேஸ்பர் ஆராதனையும், 15ஆம் திகதி காலை திருவிழா திருப்பலியும் ஆயர்கள் தலைமையில் நடைபெறவுள்ளன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே