வடக்கில் அனுமதியின்றி சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு உள்ளிட்ட ஏனைய மாகாணங்களுக்கு செல்லுபடியாகும் வழித்தட அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கு எதிராக விசேட சட்ட அமுலாக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையும் பொலிஸாரும் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு சேவையில் ஈடுபடும் 10 பேருந்துகள் உரிய வழித்தட அனுமதிப்பத்திரமின்றி இயங்குவது அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ. விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, வடக்கு மாகாணத்திற்குள் அரச திணைக்களங்கள், தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களின் பணியாளர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளும் உரிய பதிவுகள் மற்றும் அனுமதிகளுடன் இயங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின்போது பேருந்துகளின் வழித்தட அனுமதிப்பத்திரங்கள் உள்ளிட்ட சட்டபூர்வ ஆவணங்கள் பரிசோதிக்கப்படவுள்ளன.
அனுமதியின்றி சேவையில் ஈடுபடும் எந்தவொரு பேருந்திற்கும் இனிமேல் சலுகை வழங்கப்படமாட்டாது என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே