நீதித்துறை சீர்திருத்தங்கள் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத்துடன் ஜனாதிபதி கலந்துரையாடல்
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினருடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (12) பிற்பகல் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பான 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டதுடன், அது தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
நீதியை நிலைநாட்டும் செயற்பாடு நீதிமன்றங்களால் மாத்திரம் முன்னெடுக்கப்படுவதில்லை எனவும், விசாரணை, வழக்குத் தாக்கல் மற்றும் நீதிமன்ற செயற்பாடுகள் உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்த முறையில் செயற்பட வேண்டியது அவசியம் எனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தச் செயற்பாடுகளை வலுப்படுத்தும் வகையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் மனிதவளத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலஞ்ச ஊழல் புலனாய்வு ஆணைக்குழுவின் சேவைகளை மாவட்ட மட்டத்துக்கு விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மக்களுக்கு நீதித்துறை செயற்பாடுகளை இலகுபடுத்தும் வகையில் மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் நீதிமன்றங்களுக்குத் தேவையான பௌதீக வசதிகளை விரிவுபடுத்துவதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தமானது தனியான நடவடிக்கையல்ல எனவும், நீதித்துறையில் காணப்படும் கட்டமைப்பு ரீதியான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான பரந்த சீர்திருத்தச் செயற்பாட்டின் ஒரு பகுதியாகவே அது முன்னெடுக்கப்படுவதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே