அர்ஜுன மகேந்திரனை இலங்கைக்கு அழைத்து வர புதிய சட்ட வழிகள் குறித்து ஆராய்வு!
முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு அழைத்து வருவதற்கான புதிய சட்டரீதியான வழிமுறைகள் குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
மகேந்திரனை நாடு கடத்துமாறு இலங்கை விடுத்த கோரிக்கையை, சிங்கப்பூரின் நாடு கடத்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டரீதியான தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை எனக் கூறி சிங்கப்பூர் ஏற்கனவே நிராகரித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், அவரை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான மாற்று சட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி பிணைப்பத்திர பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் இலங்கையில் தேடப்படும் நபராக உள்ள அர்ஜுன மகேந்திரன் மீது 2019 ஜூன் மாதம் நிரந்தர மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதனிடையே, பல்வேறு குற்றவியல் வழக்குகளில் தேடப்படும் சந்தேக நபர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக இதுவரை 236 இன்டர்போல் சிவப்பு அறிவிப்புகள் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவற்றில் 110 சிவப்பு அறிவிப்புகள் தற்போதைய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் பெறப்பட்டவை எனவும் அவர் குறிப்பிட்டார்.
தேடப்படும் நபர்களில் 66 பேர் ஏற்கனவே இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன், மேலும் 97 பேர் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், 39 தேடப்படும் நபர்கள் இருக்கும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், மற்றுமொரு நபர் அடுத்த வாரம் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே