ஜனாதிபதியின் நாடு தழுவிய கூட்டங்கள் மக்கள் ஆதரவை மீட்கும் முயற்சி – முஜிபுர்!
அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் மற்றும் வீழ்ச்சியடைந்து வரும் மக்கள் ஆதரவை மீட்டெடுக்கும் நோக்கிலேயே ஜனாதிபதி நாடு தழுவிய ரீதியில் பொதுக்கூட்டங்களை நடத்தத் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருவதால், ஜனாதிபதி நேரடியாக மக்களை சந்தித்து நிலைமையை சமாளிக்க முயற்சிப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும், மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருவதால் சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்து வருவதாகவும், எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு மக்களின் மனநிலையை அறிந்து கொள்ளும் முயற்சியாகவே ஜனாதிபதியின் நாடு தழுவிய பயணம் அமைந்துள்ளதாகவும் முஜிபுர் ரஹ்மான் கூறினார்.
அரசாங்க அதிகாரத்தைப் பயன்படுத்தி பொதுக்கூட்டங்களுக்கு அதிகளவில் மக்களை அழைத்து வருவது பெரிய விடயம் அல்ல என தெரிவித்த அவர், கடந்த கால தேர்தல் அனுபவங்களை சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி நாடு முழுவதும் சென்று முன்வைக்கும் கருத்துக்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உரிய பதிலளிப்பார்கள் என்றும், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் தயாராக இருப்பதாகவும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே