மனித – யானை மோதலை கட்டுப்படுத்த 294 மோட்டார் சைக்கிள்கள் வழங்கல்
இலங்கையில் மனித – யானை மோதல் ஒரு சுற்றுச்சூழல் பிரச்சினையாக மாத்திரமன்றி, பல தசாப்தங்களாக இடம்பெற்ற திட்டமிடப்படாத நிலப்பயன்பாடு, யானைகளின் இயற்கையான வழித்தடங்கள் தடைப்படுதல் மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கம் உள்ளிட்ட பல காரணிகளால் உருவான சிக்கலான சமூகப் பொருளாதாரப் பிரச்சினையாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதற்கு தற்காலிக தீர்வுகளை வழங்குவதற்குப் பதிலாக, விஞ்ஞான ரீதியானதும் நிலையானதுமான தீர்வுகளை நடைமுறைப்படுத்தும் நோக்கில் விரிவான தேசிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கள மட்டத்தில் மனித – யானை மோதல்களை திறம்பட கையாள்வதற்கு மனித மற்றும் பௌதிக வளங்களின் பற்றாக்குறை முக்கிய தடையாக காணப்பட்ட நிலையில், கள உத்தியோகத்தர்களின் உடனடி நடவடிக்கை, ரோந்துப் பணிகள் மற்றும் தகவல் தொடர்பு திறனை மேம்படுத்தும் வகையில் 294 மோட்டார் சைக்கிள்களை ஒரே கட்டமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வனஜீவராசிகள் திணைக்களத்தின் வரலாற்றில் முதன்முறையாக இவ்வாறு அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் ஒரே கட்டத்தில் வழங்கப்படுகின்றன. இதன் முதற்கட்ட நடவடிக்கை திருகோணமலை மாவட்டத்தை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டமாக செப்டெம்பர் 02ஆம் திகதி கிழக்கு – அம்பாறை வலயம் மற்றும் புத்தளம் வலயத்திலும், செப்டெம்பர் 04ஆம் திகதி பொலன்னறுவை – மாத்தளை வலயத்திலும் மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளன.
இந்த நடவடிக்கையின் மூலம் மனித – யானை மோதல் ஏற்படும் பகுதிகளில் கள உத்தியோகத்தர்களின் செயற்பாட்டு திறனை அதிகரித்து, மோதல்களைத் தடுப்பதற்கும் அவசர நிலைமைகளுக்கு விரைவாக பதிலளிப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே