பொலன்னறுவை கொட்டலிய பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஏப்ரலில் நிறைவு
பொலன்னறுவை மாவட்டத்தின் திம்புலாகல பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மரதன்கடவல – ஹபரண – திருகோணமடுமடு பிரதான வீதியில் அமைந்துள்ள கொட்டலிய பாலத்தின் நிர்மாணப் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறுகியதாகவும் பாதுகாப்பற்றதாகவும் காணப்பட்ட பழைய பாலத்தில் கடந்த காலங்களில் பல்வேறு விபத்துகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, 2022ஆம் ஆண்டு பயணிகள் பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்த சம்பவமும் பதிவாகியுள்ளது.
இதனையடுத்து, பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்யும் நோக்கில், பழைய பாலத்திற்குப் பதிலாக 13.4 மீற்றர் அகலமும் 60 மீற்றர் நீளமும் கொண்ட புதிய கொங்கிரீட் பாலத்தை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்காக சுமார் 251 மில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளது. தற்போது, திட்டத்தின் கீழ் சுமார் 75 சதவீதமான நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
எஞ்சிய பணிகளை துரிதப்படுத்தி, எதிர்வரும் 2027ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் பாலத்தின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய பாலம் நிர்மாணிக்கப்பட்ட பின்னர், குறித்த பிரதான வீதியில் பயணிக்கும் பொதுமக்களுக்கு மேம்பட்ட, பாதுகாப்பான மற்றும் சீரான போக்குவரத்து வசதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே