பேஸ்புக் விருந்துகளைக் கண்காணிக்க விசேட பொலிஸ் திட்டம்
பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்படும் விருந்துகள் மற்றும் அவை நடைபெறும் இடங்கள் தொடர்பான புலனாய்வுத் தகவல்களைத் திரட்டுவதற்காக விசேட கண்காணிப்புத் திட்டமொன்றை பொலிஸ் மா அதிபர் ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தத் திட்டத்தின் ஊடாக, சில நாட்களுக்கு முன்னர் தெல்தெனிய பொலிஸ் பிரிவில் நடைபெற்ற பேஸ்புக் விருந்தொன்றில் பங்கேற்ற 41 இளைஞர், யுவதிகள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான விருந்துகள் நடைபெறும் இடங்கள் தொடர்பான புலனாய்வுத் தகவல்களை எதிர்காலத்திலும் தொடர்ச்சியாகப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேஸ்புக் விருந்துகள் என்ற போர்வையில் இளைஞர், யுவதிகள் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் வலையில் சிக்கக்கூடிய அபாயம் காணப்படுவதால், இவ்வாறான நிகழ்வுகள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சில சந்தர்ப்பங்களில் இவ்வாறான விருந்துகள் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய நபர்களால் ஏற்பாடு செய்யப்படுவதாகவும், அவை வலையமைப்புச் குற்றங்கள் மற்றும் பணத்தை இலக்காகக் கொண்ட நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டிருக்கலாம் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தங்களது பிள்ளைகளின் உரையாடல்கள், நடத்தைகள் மற்றும் பயணங்களில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பில் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனிடையே, போதைப்பொருள் தொடர்பான பிரச்சினைகளின் பின்னணியில் 2025ஆம் ஆண்டில் 175 பேர் தற்கொலை செய்துகொண்டதாகவும், அவர்களில் 172 ஆண்களும் 3 பெண்களும் அடங்குவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, 2026ஆம் ஆண்டில் இதுவரை போதைப்பொருள் தொடர்பில் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே