2027 முதல் சாதாரண தரத்தில் 7 பாடங்கள் – கல்வி சீர்திருத்தத்தில் புதிய திட்டம்
2027ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் உள்ளிட்ட 7 பாடங்களை உள்ளடக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான உபகுழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் அண்மையில் நடைபெற்ற கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான உபகுழுக் கூட்டத்திலேயே இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது, 12 மற்றும் 13ஆம் தரங்களுக்கான கல்வித் திட்டத்தில் சமூக நல்லிணக்கம், சட்டம் மற்றும் ஒழுக்கநெறி உள்ளிட்ட தொகுதிகளை (Modules) அறிமுகப்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
2027ஆம் ஆண்டு முதல் அமுல்படுத்தப்படவுள்ள பொதுக் கல்வி மற்றும் முன்பள்ளிக் கல்வி சீர்திருத்தங்களின் முன்னேற்றம் தொடர்பிலும் கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
பொதுக் கல்வி சீர்திருத்தங்களின் ஆரம்ப கட்டமாக 2 மற்றும் 6ஆம் தரங்களுக்குத் தேவையான செயற்பாட்டுப் புத்தகங்கள், ஆசிரியர் வழிகாட்டிகள் மற்றும் கற்றல் தொகுதிகள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், ஆசிரியர்களுக்கான பயிற்சித் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பில் பொதுமக்கள் மற்றும் கல்வித்துறையினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் தொடர் நிகழ்ச்சிகளை எதிர்காலத்தில் நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, முன்பள்ளிக் கல்வியை முறைப்படுத்துவதற்காக தேசிய முன்பள்ளிக் கொள்கையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதுடன், முன்பள்ளிகளைப் பதிவு செய்தல், பாடத்திட்டங்கள் மற்றும் ஆசிரியர் வழிகாட்டிகளைத் தயாரித்தல், ஆசிரியர் பயிற்சித் திட்டங்களை முன்னெடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் தற்போது இடம்பெற்று வருவதாக பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே