AI மூலம் சிறுவர்களுக்கு அதிகரிக்கும் இணைய அச்சுறுத்தல்: பெற்றோருக்கு பொலிஸார் எச்சரிக்கை

#SriLanka #Police #children #LANKA4 #Threat #Parents #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 hours ago
AI மூலம் சிறுவர்களுக்கு அதிகரிக்கும் இணைய அச்சுறுத்தல்: பெற்றோருக்கு பொலிஸார் எச்சரிக்கை

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சியுடன், இணையவழியில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களின் தன்மையும் தீவிரமடைந்து வருவதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் சிறுவர்களின் பாலியல் துஷ்பிரயோகப் படங்கள் மற்றும் காணொளிகள் (AI-generated Child Sexual Abuse Material – CSAM), சிறுவர்களின் தனியுரிமை, கண்ணியம் மற்றும் மனநலத்திற்கு பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முன்னர் இணையத்தில் பரவிய சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் படங்கள் மற்றும் காணொளிகள் உண்மையில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுவர்களின் புகைப்படங்கள் அல்லது காணொளிகளாக இருந்தன. 

எனினும், தற்போதைய AI தொழில்நுட்பத்தின் மூலம், சிறுவர்களின் சாதாரண புகைப்படங்களைப் பயன்படுத்தி, அவர்கள் நிர்வாணமாகவோ அல்லது பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாகவோ தோற்றமளிக்கும் தத்ரூபமான போலிப் படங்கள் மற்றும் காணொளிகளை உருவாக்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இத்தகைய போலியான உள்ளடக்கங்கள் சிறுவர்களின் தனியுரிமை மற்றும் கண்ணியத்தை பாதிப்பதுடன், அவர்களின் உணர்ச்சி மற்றும் மனநலத்திலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்கள் இணைய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதற்கான அறிகுறிகள்

சிறுவர்கள் இணையத்தில் அச்சுறுத்தல், அழுத்தம் அல்லது துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியிருக்கும்போது சில மாற்றங்கள் வெளிப்படக்கூடும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

  • கையடக்கத் தொலைபேசி அல்லது கணினியைப் பயன்படுத்தும்போது ஒருவர் அருகில் வந்தால் உடனடியாக திரையை மூடுவது அல்லது மறைப்பது.

  • சமூக ஊடகக் கணக்குகளின் தனியுரிமை அமைப்புகளை திடீரென மாற்றுவது அல்லது ரகசியமான புதிய கணக்குகளை உருவாக்குவது.
  • இணையப் பயன்பாடு தொடர்பில் வழக்கத்திற்கு மாறாக இரகசியமாக நடந்துகொள்வது.
  • குற்ற உணர்வு, பயம், கவலை அல்லது மன உளைச்சலுடன் காணப்படுவது.
  • குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்து தனிமைப்பட முயற்சிப்பது.

பெற்றோர் கவனிக்க வேண்டிய விடயங்கள் இணையத்தில் காணப்படும் ஆபத்துகள் மற்றும் அறிமுகமற்ற நபர்களுடன் இணையவழியில் தொடர்புகொள்வதால் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து, சிறுவர்களுடன் நட்புறவான முறையில் வெளிப்படையாக கலந்துரையாடுமாறு பொலிஸார் பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

சிறுவர்களின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிடும்போது, ‘Public’ அமைப்பிற்கு பதிலாக ‘Private’ தனியுரிமை அமைப்பைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், அறிமுகமற்ற நபர்களுடன் தங்களது புகைப்படங்கள், தனிப்பட்ட தகவல்கள் அல்லது வேறு தனிப்பட்ட உள்ளடக்கங்களை பகிர்ந்துகொள்வதைத் தவிர்க்குமாறு சிறுவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுவர்கள் பயன்படுத்தும் இணையத்தளங்கள், செயலிகள் மற்றும் இணைய தளங்களை பெற்றோர் அவதானத்துடன் கண்காணிப்பதுடன், தேவையான பெற்றோர் கட்டுப்பாடுகள் மற்றும் தொழில்நுட்ப பாதுகாப்பு வசதிகளைப் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், இணையத்தில் ஏதேனும் பிரச்சினையை எதிர்கொண்டால் பெற்றோரிடம் அல்லது நம்பிக்கைக்குரிய பெரியவர்களிடம் அச்சமின்றி தெரிவிக்கலாம் என்ற நம்பிக்கையை சிறுவர்களிடம் ஏற்படுத்துவது முக்கியம் என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையக் குற்றப் பிரிவும் சிறுவர்களுக்கு எதிரான இணையவழி வன்முறைகள் தொடர்பில் கண்காணிப்பு மற்றும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், இணையப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

சிறுவர் பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கம் இணையத்தில் காணப்பட்டால், அதனை பகிர்வதற்குப் பதிலாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஊடாக அறிக்கையிட முடியும். 

இதற்காக இலங்கையில் Internet Watch Foundation (IWF) அறிக்கையிடல் தளமும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

அவசர உதவிக்கு 1929 சிறுவர் உதவி தொலைபேசி சேவையையும் தொடர்புகொள்ள முடியும்.

தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பெற்றோர்கள் தங்களது அறிவை தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டு விழிப்புடன் செயற்பட வேண்டும் என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!