இலங்கையை புத்தாக்கத் தேசமாக மாற்றுவதே அரசாங்கத்தின் இலக்கு
உலகிலிருந்து தொழில்நுட்பக் கருவிகளை இறக்குமதி செய்து பயன்படுத்தும் நாடாக அல்லாமல், உலகிற்கே புதிய தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்கும் புத்தாக்கத் தேசமாக இலங்கையை மாற்றுவதே அரசாங்கத்தின் பிரதான இலக்காகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஒரு நாடு என்ற வகையில் முன்னோக்கிச் செல்ல வேண்டுமாயின், நாம் சம்பிரதாயக் கட்டமைப்பிலிருந்து விடுபட்டு புத்தாக்கங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய அறிவியல் மன்றத்தின் (NSF) ஏற்பாட்டில், “விஞ்ஞானத்தைப் பிரபலப்படுத்தலுக்கான NSF விருது வழங்கும் விழா – 2026” செப்டம்பர் 18ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே மேற்கண்ட கருத்து தெரிவிக்கப்பட்டது.
நாட்டின் எதிர்கால பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகிய துறைகளின் பங்களிப்பு முக்கியமானது எனவும், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பத் தீர்வுகளை ஊக்குவிப்பதன் மூலம் இலங்கையை உலகளாவிய புத்தாக்கத் துறையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
விஞ்ஞான அறிவை பொதுமக்களிடையே பரப்புவதற்கும், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் துறையில் பங்களிப்பு செய்யும் நபர்களை ஊக்குவிப்பதற்கும் இவ்விருது வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.