பிரிட்டிஷ் விமானப் படைத்தள தாக்குதல் முயற்சி - 22 வயது இளைஞர் கைது
பிரித்தானியாவின் RAF Fairford விமானப் படைத்தளத்திற்கு அருகே நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் முயற்சி தொடர்பான சம்பவத்தில், 22 வயது பிரிட்டிஷ் இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
க்ளோஸ்ஸ்டேர்ஷிரே(Gloucestershire) அமைந்துள்ள இந்த விமானப்படை தளத்திற்கு அருகே கடந்த செப்டம்பர் 27 அன்று நடந்த சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையின் ஒரு பகுதியாக, லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் இவர் கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் 7வது கைது நடவடிக்கை இதுவாகும். இருப்பினும், இதுவரை யார் மீதும் உத்தியோகபூர்வமாக வழக்கு பதிவு செய்யப்படவில்லை.
செப்டம்பர் 27 அன்று அதிகாலையில், விமானப்படை தளத்தை நோக்கி வாகனங்கள் சென்று கொண்டிருப்பதாக முறைப்பாடு வந்ததை அடுத்து, 23 முதல் 25 வயதுக்குட்பட்ட ஐந்து பிரிட்டிஷ் இளைஞர்கள் தளத்தின் எல்லைக்கு அருகில் கைது செய்யப்பட்டனர்.
வெடிபொருட்கள் தொடர்பான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இவர்கள், பின்னர் தீவிரவாதச் செயலுக்குத் தயாரான சந்தேகத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு, பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
சந்தேகநபர்களுடன் தொடர்புடைய மூன்று வேன்களில் பெட்ரோல் இருப்பதை பொலிஸார் கண்டறிந்தனர். ஆனால் வெடிபொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை.