2027 உலக நீர் தினத்தை முன்னிட்டு தேசிய வேலைத்திட்டம் – மார்ச் 23ஆம் திகதி கொழும்பில் பிரதான நிகழ்வு

#SriLanka #water #LANKA4 #programme #discussion
Abi
1 hour ago
2027 உலக நீர் தினத்தை முன்னிட்டு தேசிய வேலைத்திட்டம் – மார்ச் 23ஆம் திகதி கொழும்பில் பிரதான நிகழ்வு

2027ஆம் ஆண்டு உலக நீர் தினத்தைக் கொண்டாடும் வகையில், ஜனாதிபதி செயலகம் மற்றும் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ செயலகம் இணைந்து ஒருங்கிணைந்த தேசிய வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளன.

இது தொடர்பான விசேட கலந்துரையாடல், வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தலைமையில் அண்மையில் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ செயலகத்தில் நடைபெற்றது.

இலங்கையின் நீர்வளத்துறை சார்ந்த அனைத்து தரப்பினரையும் இணைத்து, 14 இலக்குகளின் கீழ் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 

நீர்வளத்துறை எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சினைகள் மற்றும் எதிர்காலச் சவால்களுக்கு ஒருங்கிணைந்த தீர்வுகளைக் காண்பதே இதன் பிரதான நோக்கமாகும்.

இதன் கீழ், நீர்வள முகாமைத்துவத்தை மேம்படுத்துதல், தொடர்புடைய நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல், நீர் பாதுகாப்பு தொடர்பான பொதுமக்களின் விழிப்புணர்வை அதிகரித்தல், பாதுகாப்பான குடிநீர் மற்றும் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளது.

மேலும், ஆறுகள், குளங்கள், ஈரநிலங்கள் மற்றும் நிலத்தடி நீர் வளங்களைப் பாதுகாத்தல், கழிவுநீர் முகாமைத்துவம், நீரை மீள்பயன்படுத்துதல், நீர் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்தை ஊக்குவித்தல் போன்ற விடயங்களும் இத்திட்டத்தில் உள்ளடக்கப்படவுள்ளன.

இதற்கமைய, பிரதான நிகழ்வை 2027 மார்ச் 23ஆம் திகதி கொழும்பிலுள்ள ‘வோட்டர்ஸ் எட்ஜ்’ ஹோட்டலில் நடத்துவதற்குக் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், அதனை முன்னிட்டு உலக நீர் தினக் கொண்டாட்ட வாரமொன்றையும் பிரகடனப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், நீர்வளத்துறையின் புத்தாக்கங்கள், நவீன தொழில்நுட்பங்கள், நிலைபேறான நடைமுறைகள் மற்றும் நிறுவனங்களின் பங்களிப்புகளை வெளிப்படுத்தும் தேசியக் கண்காட்சியொன்றையும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

நீரின் தரம், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு, நீர் முகாமைத்துவம், பொருளாதார வளர்ச்சி, உணவுப் பாதுகாப்பு மற்றும் நீர்வளப் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் உள்ள பிரச்சினைகளை அடையாளம் கண்டு தீர்வுகளை முன்வைப்பதற்காக தேசிய மட்டத்திலான குழுக்கள் மற்றும் உபகுழுக்களை அமைக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

உலக நீர் தினக் கொண்டாட்ட வாரத்தில், நீர்வளத்துறையுடன் தொடர்புடைய ஒவ்வொரு நிறுவனமும் தமது பொறுப்புகளுக்கு ஏற்ப விழிப்புணர்வு மற்றும் செயற்பாட்டுத் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளன.

இந்தக் கலந்துரையாடலில் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் (கிளீன் ஸ்ரீலங்கா) எஸ்.பி.சி. சுகீஸ்வர, கமத்தொழில் மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் பணிப்பாளர் நாயகம் நதீகா விக்கிரமசிங்க, நீர் வழங்கல் அமைச்சின் பணிப்பாளர் நாயகம் எஸ்.எல்.எச். கமகே மற்றும் தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் திஸ்னா ரணசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!