ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் மீண்டும் பரவல் – மக்களுக்கு எச்சரிக்கை!
இலங்கையின் பல பகுதிகளில் உள்ள பன்றிப் பண்ணைகளில் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் மீண்டும் பரவி வருவதாக விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, அநுராதபுரம், கண்டி மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 48 பண்ணைகளில் இந்நோய் கண்டறியப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் பிரதீப் குமாரவடு தெரிவித்துள்ளார்.
சுமார் 1,200 பன்றிகள் பரிசோதிக்கப்பட்டதில், 200 பன்றிகளுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நோய் மனிதர்களுக்குப் பரவாது என்பதால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், பன்றிகளின் கழிவுகளை நீர்நிலைகளில் கொட்டுவது நோய்ப் பரவலைத் தீவிரப்படுத்தக்கூடும் என்பதால், கழிவுகளை முறையாக அகற்றி, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு பண்ணையாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.