ஜப்பானில் விமான நிலைய வணிக வளாகத்தில் திருடிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பணிப்பெண்
ஜப்பானில் நரிட்டா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள பிரபல 'ஈயோன்' (Aeon) வணிக வளாகத்தில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் 23 வயது பணிப்பெண் ஒருவர் பொருட்களைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு ஜப்பானிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெஹிவளையை பகுதியைச் சேர்ந்த இந்த ஊழியர், சக பணியாளர்களுடன் ஹோட்டலில் தங்கியிருந்தபோது தனியாக அங்காடிக்குச் சென்றுள்ளார்.
அங்குள்ள பாதுகாப்பு கேமரா (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது, அவர் பொருட்களைத் திருடியது தெளிவாகப் பதிவாகியிருந்தது.
ஜப்பானிய குற்றவியல் சட்டத்தின்படி, சிறிய திருட்டாக இருந்தாலும் விசாரணைக்காக சந்தேக நபரை 21 முதல் 23 நாட்கள் வரை காவலில் வைக்க காவல்துறைக்கு அதிகாரம் உண்டு.
அங்கு வெளித் தலையீடுகளுக்கோ, செல்வாக்கைப் பயன்படுத்துவதற்கோ எந்த இடமும் இல்லை. இதனால் அந்தப் பணிப்பெண்ணிற்கு பிணை கிடைப்பதும் கடினம் எனக் கூறப்படுகிறது.
ஒருபுறம் இந்தச் சம்பவத்தால் நாட்டின் பெயர் கெட்டுக்கொண்டிருக்க, மறுபுறம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உயர் அதிகாரிகள் சிலர் ஜப்பானிய அதிகாரிகளிடம் பேசி அவரை விடுவிக்க தீவிர முயற்சி செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.