மக்கள் கருத்தின்றி பயங்கரவாத சட்டமூலம் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி அறிவிப்பு!
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் ஆகியவற்றை பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் கருத்துக்களைக் கேட்டறியாமல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை (07) நடைபெற்ற தேசிய தொழிற்சங்க மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சட்டமூலங்கள் தொடர்பில் ஆட்சேபனைகளை முன்வைத்துள்ள சிவில் சமூக அமைப்புகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடி, பரந்துபட்ட இணக்கப்பாட்டை எட்டிய பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளைப் பயன்படுத்தி ஆட்சியில் நீடிப்பது தமது அரசாங்கத்தின் நோக்கமல்ல எனக் குறிப்பிட்ட அவர், ஜனநாயக ரீதியில் மக்கள் வழங்கும் தீர்ப்புக்கு மதிப்பளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தலில் மக்கள் ஆட்சியிலிருந்து விலகுமாறு தீர்மானித்தால் அதனை ஏற்றுக்கொண்டு பதவி விலகத் தயாராக இருப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, குறித்த சட்டமூலங்கள் அடிப்படை உரிமைகள் மற்றும் சிவில் சுதந்திரங்களைப் பாதிக்கக்கூடும் எனத் தெரிவித்து தொழிற்சங்கங்கள், சிவில் சமூக அமைப்புகள், சட்டத்தரணிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்புகளை வெளியிட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, கடந்த வெள்ளிக்கிழமை (06) கொழும்பில் சட்டமூலங்களைத் திரும்பப் பெறுமாறு கோரி ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.