பேலியகொட மீன் சந்தையை நவீனமயப்படுத்த விசேட திட்டம் – அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு!
பேலியகொட மத்திய மீன் சந்தை வளாகத்தை நவீன வசதிகளுடன் அபிவிருத்தி செய்வதற்கான விரிவான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இன்று (12) அதிகாலை பேலியகொட மத்திய மீன் சந்தை வளாகத்திற்கு விசேட கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.
இதன்போது, சந்தை வளாகத்தின் தற்போதைய நிலைமை, அங்கு நிலவும் குறைபாடுகள் மற்றும் வியாபாரிகள், ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அவர் ஆராய்ந்தார்.
அத்துடன், வியாபாரிகள் மற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடி அவர்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்தார். உள்நாட்டு நுகர்வோர் மாத்திரமன்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் சுதந்திரமாக வந்து செல்லக்கூடிய நவீன வசதிகளைக் கொண்ட இடமாக மீன் சந்தை வளாகத்தை மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என அமைச்சர் தெரிவித்தார்.
பாரம்பரிய கடற்றொழில் துறையை நாட்டிற்கு அதிக பொருளாதார வருமானத்தை ஈட்டித்தரக்கூடிய நவீன வர்த்தகத் துறையாக மாற்றுவதற்கு ஜனாதிபதியின் தலைமையில் விசேட கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதற்கான நிதி ஒதுக்கீடுகள் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், சந்தை வளாகத்திற்குள் ஒழுங்கீனமான மற்றும் அழுத்தங்களை ஏற்படுத்தும் செயற்பாடுகளுக்கு எதிர்காலத்தில் இடமளிக்கப்பட மாட்டாது எனத் தெரிவித்த அமைச்சர், நுகர்வோர் அச்சமின்றி வந்து செல்லக்கூடிய ஒழுக்கமான சூழலை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
சந்தை வளாகத்தின் ஊழியர்கள் மற்றும் வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.