மாற்றுத்திறனாளிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டால் உடனடியாக அறிவிக்கவும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!
ஆசிரியர் நியமனங்களுக்கான நேர்முகப் பரீட்சைகளின்போது மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதேனும் அநீதி இழைக்கப்பட்டால், அது குறித்து உடனடியாகத் தமக்கு அறிவிக்குமாறு பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஏற்ப இரண்டாம் கட்ட நேர்முகப் பரீட்சைகளையும் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வாவின் தலையீட்டில், பார்வைக் குறைபாடுள்ள பட்டதாரிகளுடன் நேற்று (13) பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது, தேசியப் பரீட்சைகள் மற்றும் நேர்முகப் பரீட்சைகளின்போது மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் பரீட்சையின் அடிப்படையில் 17,000 பேர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பிரதமர், இது முதற்கட்ட நடவடிக்கை மாத்திரமே எனக் குறிப்பிட்டார்.
மேலும், 2022ஆம் ஆண்டு சுற்றறிக்கைக்கு அமைய ஆசிரியர் ஆட்சேர்ப்புகள் முன்னெடுக்கப்படுவதால், ஒரே விண்ணப்பதாரர் பல பாடங்களுக்கும், தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளுக்கும், சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பிரிவுகளுக்கும் விண்ணப்பித்திருக்கலாம்.
இதனால் தெரிவு நடவடிக்கைகளில் சவால்கள் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, தெரிவு நடவடிக்கைகளின் அடிப்படையில் நிலவும் வெற்றிடங்களைக் கருத்திற்கொண்டு இரண்டாம் கட்ட நேர்முகப் பரீட்சைகளை நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அதேவேளை, மாற்றுத்திறனாளிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்யும் நடைமுறைகள் தொடர்பில் நேர்முகப் பரீட்சைக் குழுவினருக்கு உரிய விழிப்புணர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும், எவருக்கேனும் அநீதி இழைக்கப்பட்டால் உடனடியாகத் தமக்கு அறிவிக்குமாறும் பிரதமர் வலியுறுத்தினார்.
ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் வெளிப்படைத்தன்மையுடனும் நியாயமான முறையிலும் இடம்பெறுவதை உறுதிப்படுத்த அரசாங்கம் தேவையான தலையீடுகளை மேற்கொள்ளும் எனவும் அவர் உறுதியளித்தார்.
மேலும், பாடசாலை மட்டத்திலான தேசிய மதிப்பீட்டுச் செயல்முறையின்போது மாற்றுத்திறனாளிப் பிள்ளைகளை மதிப்பிடுவதற்கான முறையான பொறிமுறையொன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், மாற்றுத்திறனாளி மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு உதவும் உபகரணங்களை வழங்குவதற்கும், தேவையான உபகரணங்களை உருவாக்குவதற்கும் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா உள்ளிட்ட பார்வைக் குறைபாடுள்ள பட்டதாரிகள் குழுவினரும் கலந்துகொண்டனர்.