ஞானசார தேரரின் 4 ஆண்டு சிறைத்தண்டனை உறுதி – மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு!
இஸ்லாம் மதத்திற்கு அவதூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல்நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட நான்கு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
குறித்த சிறைத்தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி ஞானசார தேரர் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதியரசர்கள் குழாம், அதனைத் தள்ளுபடி செய்து இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் திகதி கொழும்பு கிருலப்பனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஞானசார தேரர் வெளியிட்ட கருத்துக்கள், இஸ்லாம் மதத்திற்கு அவதூறு ஏற்படுத்தியதுடன், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டது.
இதனடிப்படையில், இலங்கைத் தண்டனைச் சட்டக்கோவையின் 291ஆவது பிரிவின் கீழ் சட்டமா அதிபரால் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஞானசார தேரருக்கு 2024ஆம் ஆண்டு கொழும்பு மேல்நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்திருந்தது.
இந்நிலையில், அந்தத் தண்டனைக்கு எதிராக அவர் தாக்கல் செய்த மேன்முறையீட்டைத் தள்ளுபடி செய்துள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம், முன்னர் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையையும் உறுதிப்படுத்தியுள்ளது.