புதன் கிரகத்தை அடையத் தயாராகும் BepiColombo விண்கலம்!
எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 10 பில்லியன் கிலோமீற்றர் பயணித்துள்ள BepiColombo விண்கலம், புதன் கிரகத்தின் சுற்றுப்பாதையில் நுழைவதற்குத் தயாராகி வருகின்றது.
ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனமான ESA மற்றும் ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனமான JAXA ஆகியன இணைந்து முன்னெடுக்கும் இத்திட்டம், 2018ஆம் ஆண்டு பிரெஞ்சு கயானாவிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது.
சூரியனுக்கு மிக அருகிலுள்ள புதன் கிரகத்தின் தோற்றம், உட்புறக் கட்டமைப்பு, காந்தப்புலம் மற்றும் மேற்பரப்பிலுள்ள பள்ளங்கள் தொடர்பான மர்மங்களை ஆராய்வதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
குறிப்பாக, கடுமையான வெப்பநிலை நிலவும் புதன் கிரகத்தின் துருவப் பகுதிகளிலுள்ள பள்ளங்களில் பனிக்கட்டி காணப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆய்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதுவரையான பயணத்தில் பூமியை ஒருமுறையும், வெள்ளி கிரகத்தை இருமுறையும், புதன் கிரகத்தை ஆறுமுறையும் இவ்விண்கலம் கடந்து சென்றுள்ளது.
சூரியனின் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி விண்கலத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தச் சிக்கலான பயணப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஐரோப்பா மற்றும் ஜப்பானுக்குச் சொந்தமான இரண்டு ஆய்வு விண்கலங்கள் இணைக்கப்பட்டுள்ளதுடன், அவை டிசம்பர் 9 மற்றும் 10ஆம் திகதிகளில் பிரிக்கப்பட்டு, 2027 ஏப்ரல் மாதத்தில் முக்கிய ஆய்வுகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.
இதற்கு முன்னர் அமெரிக்காவின் நாசா நிறுவனத்தினால் அனுப்பப்பட்ட Mariner 10 மற்றும் MESSENGER ஆகிய இரண்டு விண்கலங்கள் மாத்திரமே புதன் கிரகத்தை ஆய்வு செய்துள்ளன.
இந்நிலையில், BepiColombo திட்டத்தின் ஊடாக புதன் கிரகத்தின் தோற்றம் மற்றும் சூரியக் குடும்பத்தின் உருவாக்க வரலாறு தொடர்பில் புதிய அறிவியல் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.