மாசியப்பிட்டியில் அதிரடி சுற்றிவளைப்பு ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது!
யாழ் மாவட்ட விசேட அதிரடிப்படையின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், நேற்று மாசியப்பிட்டி சந்திக்கு அருகில் வீதியில் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றை நிறுத்திச் சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது, அதில் பயணித்த இரு சந்தேக நபர்களிடமிருந்தும் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
முதலாவது சந்தேக நபரிடமிருந்து 69 கிராம் 370 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், இரண்டாவது சந்தேக நபரிடமிருந்து 1 கிராம் 69 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட போதைப்பொருளில் முதலாவது சந்தேக நபரிடமிருந்தது விற்பனை நோக்கத்திற்காகக் கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், போதைப்பொருள் வியாபாரத்திற்குப் பயன்படுத்தப்படும் தராசு மற்றும் கைத்தொலைபேசி ஒன்றும் சந்தேக நபர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இருவரும் 26 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.