கடற்றொழிலாளர்களின் உழைப்புக்கு உரிய மதிப்பளிப்போம்! – அமைச்சர் சந்திரசேகர்
உலக கடற்றொழில் தினம் இன்று (21) அனுஷ்டிக்கப்படுவதை முன்னிட்டு, இலங்கை உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல் வளங்களைச் சார்ந்து வாழும் மக்களுக்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், உலக உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து, வேலைவாய்ப்பு மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதில் கடற்றொழில் துறை முக்கிய பங்காற்றுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடல் வளங்களைப் பாதுகாத்து நிலையான முறையில் பயன்படுத்துவதன் மூலம் எதிர்காலத் தலைமுறையினருக்கும் வளமான கடல் சூழலை உறுதிப்படுத்துவது அனைவரினதும் பொறுப்பாகும் எனத் தெரிவித்துள்ளார்.
இலங்கையைச் சூழ்ந்துள்ள பரந்த கடல் வளங்களை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதுடன், கடற்றொழிலாளர்களின் வருமானம் மற்றும் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், கடற்றொழில் மற்றும் நீர்வளர்ப்புத் துறையில் பெண்கள், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்துதல், பாதுகாப்பான பணிச்சூழலை உருவாக்குதல், தொழிலாளர் உரிமைகளை உறுதிப்படுத்துதல் மற்றும் கண்ணியமான தொழில் வாய்ப்புகளை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு இந்த ஆண்டு உலக கடற்றொழில் தினம் முக்கியத்துவம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
நவீன தொழில்நுட்பம், மீன்பிடி முறைகள், சந்தை வாய்ப்புகள், கடலுணவு உற்பத்தி மற்றும் ஏற்றுமதித் துறைகளில் புதிய முன்னேற்றங்களை ஏற்படுத்துவதன் ஊடாகக் கடற்றொழில் துறையை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடற்றொழிலாளர்களின் பொருளாதார மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, அவர்களின் தொழில் சவால்களுக்குத் தீர்வுகளை வழங்குவதுடன், கடல் வளங்களைப் பாதுகாத்து நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை முன்னெடுப்பதே தமது நோக்கம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இறுதியாக, கடற்றொழிலாளர்களின் உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் உரிய மதிப்பளித்து, அவர்களின் வாழ்க்கை மேம்பாடு மற்றும் எதிர்கால நலன்களை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், உலக கடற்றொழில் தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் வளமான, பாதுகாப்பான எதிர்காலம் அமைய வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.