வெளிநாடுகளில் குற்றவாளிகளாகத் தண்டிக்கப்பட்டு இலங்கைக்குத் திரும்புவோர் தொடர்பில் புதிய சட்ட நடவடிக்கை – பெண் உறுப்பினர்கள் மன்றம் கவனம்!

#SriLanka #Women #Crime #Sexual Abuse #abroad
Mahathi
5 hours ago
வெளிநாடுகளில் குற்றவாளிகளாகத் தண்டிக்கப்பட்டு இலங்கைக்குத் திரும்புவோர் தொடர்பில் புதிய சட்ட நடவடிக்கை – பெண் உறுப்பினர்கள் மன்றம் கவனம்!

வெளிநாடுகளில் பாலியல் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் உள்ளிட்ட தவறான நடத்தை சார்ந்த குற்றங்களுக்காகத் தண்டனை விதிக்கப்பட்டு இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படும் நபர்கள் தொடர்பில், நாட்டிலும் உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் அவசியம் குறித்து நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் மன்றம் கவனம் செலுத்தியுள்ளது.

குறிப்பாக, வெளிநாட்டு நீதிமன்றங்களால் வழங்கப்படும் குற்றவியல் தீர்ப்புகளை இலங்கையில் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் மன்றம் மற்றும் அதனால் நியமிக்கப்பட்ட உப குழுவின் கூட்டுக் கூட்டம் கடந்த 23ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

மன்றத்தின் தலைவியும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சருமான சரோஜா சாவித்ரி போல்ராஜ் மற்றும் உப குழுவின் இணைத் தலைவியான நாடாளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க ஆகியோரின் தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ், வெளிநாடுகளில் குற்றங்களுக்காகத் தண்டனை விதிக்கப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்படும் நபர்களின் குற்றப் பின்னணி தொடர்பான தகவல்கள், உள்நாட்டிலுள்ள சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குத் தெரியப்படுத்தப்படுவதில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால், குறித்த நபர்கள் எவ்வித குற்றப் பின்னணியும் இல்லாத சாதாரண நபர்களைப் போன்று சமூகத்துடன் இணைந்து வாழும் நிலை ஏற்படுவதாகவும், அவர்கள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கான ஆபத்து காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச தகவல் பரிமாற்றப் பொறிமுறைக்கு யோசனை! இதற்குத் தீர்வாக, வெளிநாடுகளில் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்ட இலங்கையர்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான சர்வதேச ஒருங்கிணைப்புப் பொறிமுறையொன்றை உருவாக்குவது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன், அவ்வாறான தகவல்களை இலங்கைக் காவல்துறையின் குற்றப் பதிவுக் கட்டமைப்பில் உள்ளடக்குவதற்குத் தேவையான சட்ட மற்றும் தொழில்நுட்ப ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், சிறுவர்களுடன் தொடர்புடைய நிறுவனங்களில் பணியாற்றுவதற்கு ஆட்களைத் தெரிவுசெய்யும்போது கட்டாயக் குற்றப் பின்னணிப் பரிசோதனைகளை மேற்கொள்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மீண்டும் குற்றச் செயல்கள் இடம்பெறுவதைத் தடுக்கும் வகையில், ஆபத்து மதிப்பீட்டின் அடிப்படையில் சட்டபூர்வ கண்காணிப்பு முறைமையொன்றை உருவாக்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்புச் சட்டங்களில் திருத்தம்! இதேவேளை, பெண்கள் மற்றும் சிறுவர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், 2005ஆம் ஆண்டின் 34ஆம் இலக்க வீட்டு வன்முறைத் தடுப்புச் சட்டம் மற்றும் 1999ஆம் ஆண்டின் 37ஆம் இலக்க பராமரிப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களை விரைவாகத் திருத்த வேண்டியதன் அவசியமும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான நீதித்துறை நடவடிக்கைகளை விரைவுபடுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகள் கிடைப்பதில் ஏற்படும் தாமதங்கள் காரணமாக நீதிமன்றத் தீர்ப்புகள் தாமதமடைவதைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கும், குற்றவாளிகள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கும் சட்ட மற்றும் நிறுவன ரீதியான பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்துவது இந்தக் கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!