சீதாதேவி சொன்ன இந்தக் கதை யாருக்கெல்லாம் தெரியும்...?
ராமாயணக் காவியத்தைத் தொடர்புபடுத்திச் சொல்லப்படும் பொருள் பொதிந்த குட்டிக்கதைகள் ஏராளம் உண்டு. அவற்றில், இந்தக் கதையும் ஒன்று.
ஒரு காட்டில் வேடன் ஒருவன் வேட்டையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த புலி ஒன்று அவனைத் துரத்தத் தொடங்கியது. புலிக்கு அஞ்சிய வேடன் அங்கிருந்து ஓட ஆரம்பித்தான்.
உயிர் பிழைக்க எண்ணியவன் ஒரு மரத்தின் மீது ஏறினான். முக்கால் மரம் ஏறிய பின்புதான் கவனித்தான், அந்த மரத்தில் ஏற்கெனவே ஒரு கரடி இருந்தது. அப்போது, புலி அந்தக் கரடியைப் பார்த்துப் பேசியது.
“கரடியே, அந்த மனிதன் நம் விலங்கினங்களுக்கே விரோதி. அவனைக் கீழே தள்ளிவிடு” என்றது. ஆனால் கரடியோ, “அப்படியில்லை. அவன் உயிர்பிழைப்பதற்காக இந்த மரத்தைத் தஞ்சம் அடைந்தபோதே, நான் அவனுக்குச் சரணாகதி அளித்துவிட்டேன். எனவே அவனைத் தள்ளிவிட முடியாது” என்றது.
இப்போது புலி வேறு உபாயம் செய்தது. “மனிதா! நான் இப்போது பசியாக இருக்கிறேன். நீ அந்தக் கரடியைக் கீழே தள்ளினால், அதை அடித்துத் தின்றுவிட்டுப் போய்விடுவேன்” என்றது.
மனிதன்தான் நன்றிகெட்டவன் ஆயிற்றே. ஒரு நொடியில் கரடியைக் கீழே தள்ளிவிட்டான். நழுவி விழுந்த கரடி, கிளை ஒன்றைப் பற்றிக் கொண்டு தப்பி மீண்டும் மேலேறி வந்தது.
புலி மீண்டும் கரடியிடம் சொன்னது: “பார்த்தாயா அந்த மனிதனின் கெட்ட குணத்தை. அவனை உடனே கீழே தள்ளு!”
கரடி அப்போதும் மறுத்தது. “புலியே... யாரோ ஒருவர் தன் நற்குணங் களை இழந்து நடந்துகொள்கிறார்கள் என்பதற்காக நாமும் அப்படி நடந்துகொள்ள வேண்டுமா என்ன. எனக்கு இப்போதும் அவன் விருந்தினன்தான். நான் தள்ள மாட்டேன்” என்றது. புலி ஏமாற்றத்தோடு திரும்பியது.
இந்த அற்புதமான கதையை சீதாதேவி அனுமனுக்குச் சொன்னதாகச் சொல்வார்கள். அனுமன், அசோக வனத்தின் அரக்கியரைக் கொல்ல சீதையிடம் அனுமதி கேட்டாராம். அப்போது அன்னை, தான் அவர்களுக்குச் சரணாகதி அளித்துவிட்டதாகவும், அரக்கர்கள் தவறாக நடந்து கொள்கிறார்கள் என்பதற்காக, நாமும் அவ்வாறு நடக்கத் தேவையில்லை என்று அறிவுறுத்தியதாகவும் கூறுவர்.
மேன்மக்கள் எப்போதும் மேன்மக்களே!