விதியை வென்ற பசு!
காரசேரி காட்டில் ஆவலோடு மேய்ந்து கொண்டிருந்தது ஒரு பசு.
அதை கண்ட வஞ்சக நரியின் மனதில் விபரீத ஆசை எழுந்தது.
'கொழுத்த பசுவை புசித்தால் சுவையாக இருக்கும்' என எண்ணியது. சூழ்ச்சியால் ஏமாற்றி, தன் கூட்டம் இருக்கும் பகுதிக்கு, பசுவை அழைத்து செல்ல தீர்மானித்தது.
அதற்காக ஒரு திட்டம் தீட்டியபடி, மெதுவாக பசு பக்கம் வந்தது.
அதைக் கண்டதும் முறைத்தபடி, கூரிய கொம்புகளை ஆட்டியது பசு.
எதற்கும் அஞ்சாமல், 'அண்ணே... எப்படி இருக்கீங்க...' என பவ்யமாக கேட்டது நரி.
'ரொம்ப நல்லா இருக்கிறேன்...'
பதில் சொன்னது பசு.
'எங்கிருந்து வந்திருக்கீங்க...'
'தாதன்குளம் கிராமத்திலிருந்து...'
'அப்படியா... ரொம்ப துாரமாச்சே... இந்த காய்ந்த புற்களை சாப்பிடவா இவ்வளவு துாரம் வந்தீங்க... இதுல என்ன சத்து இருக்க போகுது; நான் பெரிய தோட்டத்தில் சோளம் விதைத்து இருக்கிறேன்; நன்றாக வளர்ந்து கதிர் விளைந்துள்ளது. சாப்பிட ரொம்ப ருசியாக இருக்கும்...' என, ஒரு சோள பயிரைக் காட்டியது.
பசுவின் நாக்கில் எச்சில் ஊறியது.
இதைக் கண்டு, 'சாப்பிடுங்க...' என நீட்டியது நரி.
சற்றும் சிந்திக்காமல் ருசித்து சாப்பிட்டது பசு.
உடனே, 'எனக்கு முன்ன மாதிரி விவசாய வேலைகள் செய்ய முடிவதில்லை. தோட்டத்தை யாருக்காவது கொடுத்து விடலாம் என்றிருக்கிறேன். நீங்க வேண்டுமானால் வைத்துக்கொள்ளுங்கள். உபயோகமாக இருக்கும்...' என ஆசை வார்த்தை கூறியது.
தலையாட்டி, 'சரி...' என்றது பசு. நைசாக பேசிய நரியுடன் புறப்பட்டது.
கண்ணுக்கு எட்டிய துாரம் வரை தோட்டம் எதையும் காணவில்லை.
சற்று துாரம் நடந்த பின், 'என்ன நரியாரே... எதையும் காணவில்லையே...' என கேட்டது பசு.
ஏளனமாக சிரித்தபடி, 'தோட்டமாவது, கத்தரிக் காயாவது... அட பைத்தியக்கார பசுவே... மாமிச பட்சியான நான், தோட்டம் போடுவேனா...' என்றது.
பின், 'முக்கா புல்லா... முக்கா புல்லா... உன் விதி முடியுது, முக்கா புல்லா...' என பாடியபடி நடனம் ஆடியது நரி.
அதன் வஞ்சக வலை பற்றி நிதானமாக யோசித்தது பசு.
விதியை மதியால் வெல்ல முடியும் என்ற துணிவு கொண்டு, 'என் அடிவயிறை பார்...' என்றது பசு.
உற்றுப் பார்த்து, 'மனித விரல்கள் மாதிரி தொங்குகிறதே, அது என்ன...' என்று கேட்டது நரி.
'அது சுவை மிக்க பாலை தரும். என் மாமிசத்தை விட, பன்மடங்கு ருசியாக இருக்கும் அந்த பால். அதை பருகினால் நீண்ட ஆயுளோடு வாழலாம்... எந்த விலங்கும் எதிர்த்து நிற்க முடியாது...' என்றது.
ஆசை மேலிட, 'அதில் எனக்கும் கொஞ்சம் தருவாயா...' என்றது நரி.
'கண்டிப்பாக தருகிறேன்... என் பின்பக்கமாக வந்து பருகிக் கொள்...'
மிக சாதுாரியமாக அழைத்தது.
மகிழ்வுடன் வந்த நரியை, பின்னங்காலால் எட்டி உதைத்தது பசு.
நயவஞ்சக நரி, தொலைவில் விழுந்து மரண ஓலமிட்டது.
மதியால் வென்ற பசு, வீடு நோக்கி கம்பீர நடை போட்டது.
குழந்தைகளே... அச்சம் இன்றி சிந்தித்தால் எதையும் வெல்லலாம்.