வெண்பொங்கல் கோவிலில் செய்வது போன்று.....

பொங்கல் செய்ய தேவையான பொருட்கள் :
பச்சரிசி – ஒரு டம்ளர்,
பாசிப்பருப்பு – அரை டம்ளர்,
நெய் – 3 ஸ்பூன்,
எண்ணெய் – 5 ஸ்பூன்,
பெருங்காயம் – ஒரு சிறிய துண்டு,
இஞ்சி – ஒரு சிறிய துண்டு,
பச்சை மிளகாய் – 2,
மிளகு – ஒரு ஸ்பூன்,
சீரகம் – ஒரு ஸ்பூன்,
முந்திரி – 20,
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி,
உப்பு – ஒரு ஸ்பூன்.
பொங்கல் செய்முறை :
முதலில் பெருங்காயத்தை ஒரு சிறிய கிண்ணத்தில் வைத்து அதில் கால் டம்ளர் சுடு தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். சிறிது நேரத்திலேயே பெருங்காயம் கரைந்து இருக்கும். அதன் பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து அதில் அரை டம்ளர் பாசிப்பருப்பை சேர்த்து, பாசிப்பருப்பு பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும். அதன் பின் பச்சரிசியையும் அதனுடன் சேர்த்து லேசாக சூடு ஏறும் வரை வறுக்க வேண்டும். இவ்வாறு செய்வதனால் பொங்கல் அதிகம் குழையாமல் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் அழகாக வரும். பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பு இவை இரண்டும் சேர்ந்து ஒண்ணரை டம்ளர் இருக்குமாறு எடுத்துள்ளதால் இதற்கு ஐந்தரை டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதனுடன் 2 பச்சை மிளகாய் சேர்த்து கொள்ள வேண்டும். இதனுடன் ஊறவைத்த பெருங்காய கரைசலில் இருந்து ஒரு ஸ்பூன் சேர்த்துகொள்ள வேண்டும். பச்சை மிளகாய் மற்றும் பெருங்காய கரைசல் இவை இரண்டையும் சேர்க்கும் பொழுது தான் உங்களுக்கு கோவிலில் கொடுக்கும் பொங்கலின் சுவை கிடைக்கும். அதன் பிறகு இவற்றுடன் ஒரு ஸ்பூன் நெய் சேர்க்க வேண்டும். அதனுடன் உப்பை சேர்த்து கிளறி குக்கரை மூடி விசில் போட வேண்டும். 3 அல்லது 4 விசில் வரும் வரை காத்திருந்து பின்னர் குக்கரை இறக்க வேண்டும்.
தாளிப்பதற்கு ஒரு தாளிக்கும் கரண்டியை அடுப்பில் வைத்து அதில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து, அதனுடன் ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் மிகவும் பொடியாக நறுக்கி வைத்த இஞ்சியை போட வேண்டும். இஞ்சி பொன்னிறமாக பொரித்து வந்தவுடன் மிளகு மற்றும் சீரகத்தை சேர்க்கவேண்டும். அவற்றுடன் முந்திரிப்பருப்பையும் சேர்க்க வேண்டும். அதன்பின் ஒரு பிடி கருவேப்பிலை சேர்க்கவேண்டும்.
இதனுடன் முக்கியமாக 2 ஸ்பூன் பெருங்காய கரைசலை சேர்க்க வேண்டும். தாளித்த இவற்றை பொங்கலில் சேர்த்து கிளறி விடவேண்டும். பின்னர் அதன்மீது ஒரு ஸ்பூன் நெய் சேர்க்க வேண்டும். ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் அப்படியே விட்டு விட்டு பிறகு பரிமாறி கொடுக்க வேண்டும். இவ்வாறு ஒரு முறை செய்து பாருங்கள் கோவிலில் கொடுக்கும் பொங்கலின் சுவையும், மணமும் மாறாமல் கிடைக்கும்.



