மலையக பால் பண்ணை விவகாரத்தில் நடப்பது என்ன ? விவசாயத்துறை அமைச்சர் கருத்து

#SriLanka #government #people
Yuga
3 years ago
மலையக பால் பண்ணை விவகாரத்தில் நடப்பது என்ன ? விவசாயத்துறை அமைச்சர் கருத்து

அரசாங்கத்தினால் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள திரவப்பால் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தினால், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு இல்லாது போகும் என பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் வெளியிட்ட கருத்து, அடிப்படையற்றது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிக்கின்றார்.

விவசாயத்துறை அமைச்சர், ஊடக அறிக்கையொன்றின் ஊடாக, இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த திட்டத்தின் ஊடாக பெருந்தோட்ட காணிகளை விற்பனை செய்ய அரசாங்கம் முயற்சிப்பதாக கூறப்படும் கருத்தையும், விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நிராகரித்துள்ளார்.

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நாவலபிட்டி – கலபட பெருந்தோட்டப் பகுதிக்கு சொந்தமான 800 ஏக்கர் நிலப்பரப்பில், 5000 பசுக்களுடன் பண்ணையொன்றை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னதாகவே, பெருந்தோட்ட நிறுவனத்துடனும், தொழிலாளர்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தி, அனுமதியை பெற்றுக்கொண்டதாக அவர் குறிப்பிடுகின்றார்.

அத்துடன், குறித்த பெருந்தோட்ட பகுதியிலுள்ள வனப் பகுதியிலேயே இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்த பசுப் பண்ணையினால், பெருந்தோட்ட பகுதியில் வாழும் சுமார் 500 இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்கள் கிடைக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அதேவேளை, 100 இளைஞர்களுக்கு மிளகாய் செய்கை செய்வதற்காக, தலா அரை ஏக்கர் காணியை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் கூறுகின்றார்.

அதேபோன்று, குறித்த பெருந்தோட்டப் பகுதியில் வாழும் மக்களுக்கு, தமக்கான வீடுகளை நிர்மாணித்துக்கொள்ள, 7 பச்சர்ஸ் காணியை வழங்கவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிடுகின்றார்.

பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த முயற்சிக்கும் தருணத்தில், அதற்கு தடை விதிக்கும் வகையில் தமிழ் அரசியல்வாதிகள் முதலை கண்ணீர் விட்டு செயற்பட்டு வருவதாக அவர் கூறுகின்றார்.

தமிழ் அரசியல் தலைவர்களின் பொய்யான கருத்துக்களை செவிமடுக்காது, இந்த வேலைத்திட்டத்திற்கு ஆதரவை வழங்கி, பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்திக்காக பெருந்தோட்ட மக்கள் முன்வர வேண்டும் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கோரிக்கை விடுக்கின்றார்.

பால் பண்ணை தொடர்பிலான அமைச்சரவை தீர்மானம்

பாரியளவிலான வர்த்தக ரீதியான பால் பண்ணைகளை அமைப்பதற்காக தனியார்துறை முதலீட்டாளர்களுக்கு நீண்டகாலக் குத்தகை அடிப்படையில் காணி வழங்கல்

இலங்கையின் திரவப்பால் தேவையின் 40 வீதமானவை உள்ளூரில் உற்பத்தி செய்யப்படுவதுடன், ஏனையவற்றை இறக்குமதி செய்வதற்காக வருடாந்தம் 50 பில்லியன் ரூபாய்கள் செலவிடப்படுகின்றன. அதனால், பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் வறுமையொழிப்புக்கான ஜனாதிபதி செயலணியால் உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்கான யோசனைகள் இலங்கை முதலீட்டு சபையால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய, இலங்கை முதலீட்டுச் சபை, ஆர்வம் காட்டும் முதலீட்டாளர்களின் யோசனைகளைக் கோரியுள்ளதுடன், குறித்த சபையின் தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ள யோசனைகளை சமர்ப்பித்தவர்களுக்கு தேசிய கால்நடை அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான பண்ணைகளில் தற்போது பயன்படுத்தாத காணிகள் மற்றும் பயன்பாட்டுக்கு உட்படுத்தாத ஏனைய அரச காணிகளை நவீன பால் பண்ணைகளாக அபிவிருத்தி செய்வதற்காக கீழ்க்குறிப்பிட்ட வகையில் 30 வருடங்கள் நீண்டகால குத்தகையின் அடிப்படையில் வழங்குவதற்காக விவசாய அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

H.B.K.I.R International Investment/ Access Agro (Pvt) Ltd  நிறுவனத்திற்கு 700 ஏக்கர்கள் மற்றும் Pesara Logistics நிறுவனத்திற்கு 60 ஏக்கர்களும் தேசிய கால்நடைகள் அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான நிக்கவெரட்டிய பகுதியில் அமைந்துள்ள பண்ணையில் ஒதுக்கி வழங்கல்.

அரச பெருந்தோட்ட அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான கலபொடவத்த பெருந்தோட்டம் மற்றும் மவுன்ட் ஜின் தோட்டங்களில் 811 ஏக்கர்கள் Farm’s Pride (Pvt)  Ltd நிறுவனத்திற்கு ஒதுக்கி வழங்கல்
அரச பெருந்தோட்ட அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான தெல்தொட்ட பெருந்தோட்டம் மற்றும் க்றேவ் வெலி தோட்டங்களில் முறையே, 200 ஏக்கர்கள் மற்றும் 150 ஏக்கர்களை Hillside Agro  (Pvt)  Ltd நிறுவனத்திற்கு ஒதுக்கி வழங்கல்

தேசிய கால்நடைகள் அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான கொட்டுக்கச்சிய பண்ணையில் 250 ஏக்கர்களை Gamma Pizzakraft  (Pvt)  Ltd நிறுவனத்திற்கு ஒதுக்கி வழங்கல்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!