நாளைய போட்டிக்காக அதிரடியாக பயிற்சியில் ஈடுபட்டுவரும் தல டோனி
இந்தியாவில் உருவெடுத்த கொரோனா 2ம் அலை காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர், அமீரகத்தில் நாளை செப்டம்பர்.19ம் தேதி முதல் மீண்டும் தொடங்குகிறது. இதன் முதல் போட்டியிலே தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மல்லுக்கட்ட உள்ளன. தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள இந்த அணிகளில் 4 வெற்றிகளுடன் மும்பை அணி 4வது இடத்திலும், 5 வெற்றிகளுடன் சென்னை அணி 2ம் இடத்திலும் உள்ளன.
சென்னை அணி இன்னும் 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றால் 'பிளே-ஆப்' சுற்றை எட்டி விடலாம் என்ற முனைப்புடன்ஆயத்தமாகி வரும் நிலையில், மும்பை அணி 4-5 போட்டிகளில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். மேலும் நாளை நடக்கவுள்ள முதல் போட்டியில் வெல்லும் அணி புள்ளி பட்டியலில் மேலும் முன்னேற்றம் காணும். எனவே இந்த போட்டி இரு அணிகளுமே முக்கியம் வாய்ந்த போட்டியாக உள்ளது.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சொதப்பிய சென்னை அணி 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. ஆனால் புதிய வீரர்களின் வருகையால் இந்த சீசனில் எழுச்சி பெற்றது. குறிப்பாக, அணியில் மறுபிரவேசம் செய்த சுரேஷ் ரெய்னா, ஆல்-ரவுண்டர் மொயீன் அலி சரியான பேட்டிங் கலவைக்கு வலுசேர்த்தனர். இளம் வீரர் ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் முன்னணி வீரர் பாப் டு பிளிஸ்சிஸ் ஆகியோரின் அதிரடியால் அணி வலுவான நிலையில் உள்ளது. எனினும், கேப்டன்ஷிப்பிலும் விக்கெட் கீப்பிங்கிலும் அசத்தி வரும் கேப்டன் தோனியின் பேட்டிங் ஃபார்ம் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
40 வயதை எட்டியுள்ள கேப்டன் தோனிக்கு விக்கெட் கீப்பிங், கேப்டன்ஷிப், ரன்னிங் என அனைத்தும் சரியாக இருந்தாலும் பேட்டிங்கில் அவரால் பந்துகளை சரியாக க்ளிக் செய்து ஆட சிரமப்பட்டு வருகிறார். மேலும், ஐபிஎல் தொடர்களில் வான வேடிக்கை காட்டி ரன் மழை பொழியும் அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பந்தை விரட்ட கடினப்படுகிறார். இதனால் ஒரு புது முயற்சியை எடுத்துள்ள கேப்டன் தோனி ஐக்கிய அரபு அமீரகத்தில் தினமும் 3 முதல் 4 மணி நேரம் பேட்டிங் பயிற்சி செய்து வருகிறார்.
கம்பீர் உட்பட பல சீனியர் வீரர்கள், தோனியின் பேட்டிங்கை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அணியின் வெற்றிக்காக தனது பேட்டிங்கை மேம்படுத்த கடுமையாக உழைத்து வருகிறார். தோனி இன்னும் 331 ரன்கள் எடுத்தால், ஐபிஎல் போட்டிகளில் 5000 ரன்களை கடப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.