IPL Match35 - சென்னை அணிக்கு 157 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்த பெங்களூரு அணி
ஐ.பி.எல். தொடரின் 35-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. சரியாக 7 மணிக்கு டாஸ் சுண்டப்படும். ஷார்ஜா மைதானத்தில் மணல் புயல் வீசியதால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டது. சுமார் அரைமணி நேரம் கழித்து டாஸ் சுண்டப்பட்டது.
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ். டோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். சென்னை அணியில் மாற்றம் ஏதுமில்லை. ஆர்.சி.பி.-யில் டிம் டேவிட், நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டனர்.
விராட் கோலி, தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்தில் அபாரமாக விளையாடினர். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. முதல் 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் குவித்தது.
அதன்பின் ரன் உயர்வில் சரிவு ஏற்பட்டது. 10 ஓவரில் 90 ரன்கள் எடுத்திருந்தது. தேவ்தத் படிக்கல் 35 பந்திலும், விராட் கோலி 36 பந்திலும் அரைசதம் அடித்தனர். விராட் கோலி 41 பந்தில் 53 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது ஆர்.சி.பி. 13.2 ஓவரில் 111 ரன்கள் எடுத்திருந்தது. 11-வது ஓவரில் இருந்து 13.2 ஓவர் வரை 20 பந்தில் 11 ரன்கள் மட்டுமே எடுத்தது ஆர்.சி.பி.
அடுத்து வந்த டி.வில்லியர்ஸ் 12 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். சிறப்பாக விளையாடிய தேவ்தத் படிக்கல் 50 பந்தில் 70 ரன்கள் சேர்த்தார். படிக்கல் ஆட்டமிழக்கும்போது ஆர்.சி.பி. 17 ஓவரில் 140 ரன்கள் எடுத்திருந்தது.
கடைசி மூன்று ஓவரில் 16 ரன்கள் அடிக்க ஆர்.சி.பி. 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் சேர்த்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பிராவோ 3 விக்கெட்டும், ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.