இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்....புத்தகமான எஸ்பிபி.,யின் முதலாம் ஆண்டு நினைவு தினம்

Prabha Praneetha
2 years ago
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்....புத்தகமான எஸ்பிபி.,யின் முதலாம் ஆண்டு நினைவு தினம்

எஸ்பிபி என அனைவராலும் பாசமாக அழைக்கப்படும் மற்றும் மறக்கமுடியாத ஒரு நல்ல மனிதர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், பின்னணி பாடகர், டிவி பிரபலம், இசை அமைப்பாளர், நடிகர், டப்பிங் கலைஞர், திரைப்பட தயாரிப்பாளர் என தான் தடம் பதித்த அனைத்து துறைகளிலும் வெற்றிக் கொடி நாட்டியவர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 6 மொழிகளில் காலத்தால் அழிக்க முடியாத, நெஞ்சை விட்டு நீங்காத பல ஆயிரக் கணக்கான பாடல்களை பாடியவர் எஸ்பிபி.

யாரும் தொட முடியாத பல சாதனைகளை படைத்த எஸ்பிபி, யாராலும் 
எதிர்பாராத ஒரு நாளில் தனது 74 வது வயதில் 2020 ம் ஆண்டு செப்டம்பர் 25 ம் திகதி காலமானார்.

கொரோனா பாதிப்பை தொடர்ந்து ஏற்பட்ட பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாக சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்பிபி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

SP Balasubrahmanyam's to start with photograph from clinic is out SPB's  thumbs-up photo goes viral

Last Rites Of SPB To Be Held In His Farmhouse With State Honours

 அவரின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று  கோடிக்கணக்கான அவரின் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இன்ஜினியரிங் படிக்கும் போதே இசையின் மீதான ஆர்வத்தால் இசை பயின்று, பல போட்டிகளில் கலந்து கொண்டு சிறந்த பாடகருக்கான பரிசுகளை வென்றுள்ளார்.

இளையராஜா, கங்கை அமரன், பாஸ்கர் ஆகியோருடன் இணைந்து லைட் மியூசிக் ட்ரூப் வைத்து நடத்தி வந்த எஸ்பிபி, ஆடிசனில், "நிலவே என்னிடம் நெருங்காதே" பாடலை பாடி வாய்ப்பு கேட்டார். 1966 ம் ஆண்டு தெலுங்கில் பின்னணி பாடி தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்தார் .

1969 ம் ஆண்டு தான் தமிழில் பின்னணி பாடும் வாய்ப்பு எஸ்பிபி.,க்கு கிடைத்தது. எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், எல்.ஆர்.ஈஸ்வரியுடன் இணைந்து, " ஆத்தானோடு இப்படி இருந்து எத்தனை நாளாச்சு " என்ற பாடல் தான் எஸ்பிபி தமிழில் பாடிய முதல் சினிமா பாடல். ஆனால் அந்த பாடல் வெளி வரவில்லை. 

அதற்கு பிறகு சாந்தி நிலையம் படத்திற்காக பி.சுசிலாவுடன் இணைந்து பாடிய "இயற்கை என்னும் இளைய கன்னி" பாடல் தான் எஸ்பிபி பாடிய முதல் தமிழ் சினிமா பாடலாக கருதப்படுகிறது. தொடர்ந்து எம்ஜிஆருக்காக அடிமைப்பெண் படத்தில் "ஆயிரம் நிலவே வா" பாடல் மிகப் பெரிய ஹிட்டானது.

Mangalore Today

தனது 54 வருட திரைப்பயணத்தில் 40,000 க்கும் அதிகமான பாடல்களை எஸ்பிபி பாடி உள்ளார். இது கின்னஸ் உலக சாதனையாகவே பார்க்கப்படுகிறது. 1981 ம் ஆண்டு கன்னட மொழியில், காலை 9 மணி துவங்கி இரவு 9 மணி வரையிலான 12 மணி நேரத்தில் 21 பாடல்களை ரெக்கார்டு செய்து சாதனை படைத்தவர் எஸ்பிபி.

அது மட்டுமல்ல ஒரே நாளில் 19 தமிழ் பாடல்கள், 16 இந்தி பாடல்களையும் பாடி ரெக்கார்டிங் செய்து சாதனை படைத்த ஒரே பின்னணி பாடகர் எஸ்பிபி மட்டும் தான்.

திரைப்பட பாடல்கள் மட்டுமின்றி தனி ஆல்பம், பக்தி ஆல்பங்கள் பலவற்றையும் எஸ்பிபி பாடி உள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் புகழ்பெற்ற பல டிவி சீரியல்களின் டைட்டில் சாங்கையும் எஸ்பிபி பாடி உள்ளார்.

தமிழில் சித்தி, சொந்தம், நிம்மதி உங்கள் சாய்ஸ், நம்பிக்கை, சொர்க்கம், வசந்தம், மஞ்சள் மகிமை, மெட்டி ஒலி, மோகினி, அழகு உள்ளிட்ட பல சீரியல்களில் பாடல் பாடி உள்ளார்.
நான்கு மொழிகளில் சிறந்த பாடகருக்கான தேசிய திரைப்பட விருதினை 6 முறை வென்ற எஸ்பிபி, தெலுங்கு சினிமாவிற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக ஆந்திரா மாநில அரசின் நந்தி விருதினை 25 முறை பெற்றுள்ளார். ஏராளமான தமிழக மற்றும் கர்நாடக அரசு விருதுகளையும் பெற்றுள்ளார். 

இந்திய சினிமாவிற்கு ஆற்றிய இசை சேவைக்காக என்டிஆர் தேசிய விருது, இந்திய சினிமாவின் Personality of the Year என்ற சில்வர் பீக்காக் விருது, மத்திய அரசின் பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்மவிபூஷன் ஆகிய விருதுகளையும் வென்றுள்ளார் எஸ்பிபி.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் டிவி சீரியல்கள் நடித்ததுடன், ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் இருந்துள்ளார்.

2010 ம் ஆண்டு வரை தமிழிலில் இருந்து தெலுங்கிற்கு டப்பிங் செய்யப்பட்ட அனைத்து கமலஹாசன் படங்களிலும் கமலுக்காக டப்பிங் பேசியவர் எஸ்பிபி தான். 1985 ல் கமல் நடிப்பில் மிகப் பெரிய ஹிட் ஆன சிப்பிக்குள் முத்து படத்தில் கமலுக்காக தமிழிலும் டப்பிங் பேசியது எஸ்பிபி தான். 2008 ல் கதாநாயகடு படத்திற்கு ரஜினிக்காக டப்பிங் பேசியதும் எஸ்பிபி தான்.

தமிழ் சினிமாவிற்காக எஸ்பிபி கடைசியாக பாடிய பாடல் அண்ணாத்த படத்தில் டி.இமான் இசையில் இன்ட்ரோ பாடலான அண்ணாத்த அண்ணாத்த அடிதடி சரவெடி எல்லாம் கூத்தே என்ற பாடல் தான். இதோடு மருத படத்திற்காக இளையராஜா இசையில் மாமன் கொடுக்கும் பாடலையும் எஸ்பிபி பாடி உள்ளார்.

கடந்த ஆண்டு இதே நாளில் மிகப் பெரிய சாகாப்தத்தை இசையுலகம் இழந்தது. அவரது முதலாமாண்டு நினைவு நாளில் எஸ்பிபி.,க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அவரின் மிகப் பெரிய ரசிகரான எழுத்தாளர் கே.பி.சுதீரா அவரைப் பற்றி எழுதி புத்தகம் ஒன்று இன்று வெளியிடப்பட உள்ளது.

கமல், ரஜினி, பின்னணி பாடகி சித்ரா, கவிஞர் வைரமுத்து, மனோ ஆகியோர் இணைந்து இந்த புத்தகத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர். SPB : Pattinte Kadalazham என்ற தலைப்பை  கொண்ட 400 பக்க இந்த புத்தகத்தில் எஸ்பிபி.,யில் வாழ்க்கை பற்றி எழுதப்பட்டுள்ளது.