புலம்பெயர் தமிழ் அமைப்புகள் கோட்டாவுடன் பேச நிபந்தனை

Prabha Praneetha
3 years ago
புலம்பெயர் தமிழ் அமைப்புகள் கோட்டாவுடன் பேச நிபந்தனை

 

தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குப் புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் பேசத் தயார் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்காவில் தெரிவித்திருந்த நிலையில், சர்வதேச மத்தியஸ்தம் மூலம், இலங்கை அரசுடன் பேச்சு நடத்தலாம் என்று புலம்பெயர் நாடுகளைத் தளமாக கொண்டு இயங்குகின்ற பிரதானமான 08 புலம்பெயர் தமிழ் அமைப்புகள் தீர்மானம் எடுத்துள்ளன.

தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் பேசத் தயார் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளருடன் நடத்திய சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக கனேடிய தமிழர் தேசிய பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை, ஆஸ்திரேலிய தமிழ்க் காங்கிரஸ், நோர்வே ஈழத் தமிழர் அவை, அயர்லாந்து தமிழர் பேரவை, தென்னாபிரிக்கா அமைதி மற்றும் நீதிக்கான ஒற்றுமை குழு, பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை, அமெரிக்க தமிழர் செயற்பாட்டுக்  குழு ஆகிய 8 புலம்பெயர் தமிழர் அமைப்புகள் கூட்டாகக் கருத்து வெளியிட்டுள்ளன.

உலக நாடுகளில் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நோர்வே, ஐக்கிய இராச்சியம், கனடா, பிரான்ஸ், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, அயர்லாந்து ஆகிய நாடுகளைத் தளமாகக் கொண்டு இயங்கும் இந்த எட்டு அமைப்புகளும் புலம்பெயர் அமைப்புக்களில் மிக முக்கியமானவை.

பிரித்தானியா, அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளில் ஒன்று அல்லது இணைந்த சர்வதேச மத்தியஸ்தம் மூலம் இலங்கை அரசுடன் பேச முடியும் என்று இந்த எட்டு புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் தீர்மானம் எடுத்துள்ளன.

ஆனால், பொறுப்புக்கூறலில் உள்ளகப் பொறிமுறை மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்கின்ற இலங்கை அரசின் நிலைப்பாட்டை முற்றாக நிராகரிப்பதாகவும் இந்த எட்டு புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் முடிவெடுத்துள்ளன.

“ஜனாதிபதியின் அழைப்பு தாராள மனப்பான்மையின் வெளிப்பாடாக இருக்க முடியும் என்று நாம் நம்பவில்லை. சர்வதேச சமூகம் ஸ்ரீலங்காவுக்கு எதிரான நிலைப்பாட்டில் மிக இறுக்கமாக உள்ளது.

சர்வதேச சமூகத்தை இந்நிலைப்பாட்டுக்கு கொண்டு சென்றதில் புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் பங்கும், பங்களிப்பும் காத்திரமானவை. ஆகவேதான், இலங்கை ஜனாதிபதி புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் பேச்சு நடத்த தயார் என்று பந்து ஒன்றை வீசி உள்ளார்.

ஜி. எஸ். பி. பிளஸ் சலுகைகள், சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் நிறுத்தப்படலாம் என்கிற பாரிய அச்சம் இலங்கைக்கு தொற்றியுள்ளது” என்றும் இந்தப் புலம்பெயர் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

இதேநேரம், அரசியல் கைதிகள் நிபந்தனை இன்றி விடுவிக்கப்பட வேண்டும், வடக்கு, கிழக்கில் படைத் தரப்பினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும், பௌத்த ஆக்கிரமிப்புகள் நிறுத்தப்பட வேண்டும், காணாமல்போனோர் பிரச்சினைக்குத் தீர்வு தரப்பட வேண்டும்.

 உள்ளூர் தமிழ்த் தலைமைகளுடனும் பேச்சு நடத்தப்பட வேண்டும் ஆகிய விடயங்களை நடைமுறைப்படுத்தி நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் எனவும் இந்தத் தரப்புக்கள் கருத்துரைத்துள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!