கரும்புத்தோட்ட காணியை நெற்செய்கைக்காக காணியற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கும் பணி இன்று ஆரம்பம்

#Kilinochchi
Prasu
2 years ago
கரும்புத்தோட்ட காணியை நெற்செய்கைக்காக காணியற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கும் பணி இன்று ஆரம்பம்

கிளிநொச்சி ஸ்கந்தபுரம் கரும்புத்தோட்டக் காணியை காலபோக நெற்செய்கைக்காக காணியற்றவர்களுக்குப் பகிர்ந்தளிப்பதற்காக அளவிடும் பணிகள் இன்றையதினம் ஆரம்பித்துவைக்கப்பட்டது. 

நீண்டகாலம் தனிபர்களின் அத்துமீறிய ஆக்கிரமிப்பின்கீழிருந்த 196 ஏக்கர் அளவான இந்தக் காணியை தமக்கு மீட்டுத் தருமாறு பிரதேச பொதுமக்கள் விடுத்த வேண்டுகோளுக்கமைய மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் கடற்றொழில் அமைச்சர் டக்ள் டக்ளஸ் தேவானந்தா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். 

நீண்டகாலம் தனிநபர்களின் அத்துமீறிய ஆக்கிரமிப்பின் கீழிருந்த இந்தக் காணியை மீட்பதற்கு பல்வேறு காலகட்டங்களில் பல அரசியல் தலைமைகளிடமும் பிரதேச அமைப்புக்கள் விடுத்த வேண்டுகோள் நிறைவேற்றப்படாத நிலையில், 2020இல் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைமைப் பொறுப்பை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏற்ற பின்னர் அவரிடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. 

மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் மேலதிக இணைப்பாளர் கோ.றுஷாங்கன் மூலம் விடுக்கப்பட்ட இந்த வேண்டுகோளை விரிவாக ஆராய்ந்து பிரதேச செயலாளர், மாவட்டச் செயலாளர் என அனைத்துத் தரப்புக்களுடனும் கலந்துரையாடி, அந்தக் காணியை பிரதேச பொதுமக்களுக்கே வழங்குவது என்ற முடிவை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னதாக அறிவித்திருந்தார். 

இதன்படி, கரைச்சிப் பிரதேச செயலாளர் பாலசிங்கம் ஜெயகரன் தலைமையில் இன்றையதினம் கரும்புத்தோட்ட பிள்ளையார் கோவிலில் உத்தியோகபூர்வமாக நடாத்தப்பட்ட நிகழ்வைத் தொடர்ந்து காணிகளை அளக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு மேலதிக இணைப்பாளர் கோ.றுஷாங்கன், பிரதேச காணி உத்தியோகத்தர் கருணா, நில அளவைத் திணைக்கள உத்தியோகத்தர், கிராமசேவையாளர் ஆகியோருடன் பிரதேச அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு காணி அளவிடும் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர். 

பிள்ளையார் ஆலய நிகழ்வைத் தொடர்ந்து, நில அளவைத் திணைக்களத்தினர் 196 ஏக்கர் அளவான கரும்புத்தோட்டக் காணியை அளவிடும் பணிகளை இன்றையதினமே ஆரம்பித்துள்ளனர். 

நில அளவைப் பணிகள் நிறைவடைந்ததும், பிரதேச அமைப்புக்கள் ஊடாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள காணிகளற்ற தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு அந்தந்த அமைப்புக்களின் ஊடாக காலபோக நெற்செய்கைக்காக தலா ஒரு ஏக்கர் காணிகள் வழங்கப்படவுள்ளன. 

எதிர்காலத்தில் இந்தக் காணியில் முழு அளவில் கரும்புச் செய்கையை ஆரம்பித்து, மேலும் அதை பிற பகுதிகளுக்கும் விரிவாக்க படிப்படியாக கரும்புப் பாணி, சர்க்கரை உற்பத்திகளிலிருந்து பாரிய சீனி உற்பத்தித் தொழிற்சாலையை உருவாக்குவது வரையில் பரந்தளவிலான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று, நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சார்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவரது மேலதிக இணைப்பாளர் கோ.றுஷாங்கன் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!