குழந்தை திருமணங்கள், தற்கொலைகள் தடுக்க வேண்டும்!! பிக்பாஸ் கமல்
பிக்பாஸ் தமிழ் சீசன் 5 அக்டோபர் 3 ம் திகதி ஆரம்பமாகி நடந்து வருகிறது. இதில் முதல் வாரத்தின் இறுதியில் கமல் வரும் எபிசோட் இன்று ஒளிபரப்பப்பட்டது.
இதில் போட்டியாளர்கள் சொல்லிய கதை பற்றி கமல் பேசினார்.
அப்போது நமீதாவின் கதை பற்றி பேசிய கமல், அதிலிருந்து சமூகம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடத்தையும் வலியுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து மற்ற போட்டியாளர்கள் கூறிய கதை பற்றியும், அதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றியும் கமல் பேசினார்.
அப்போது சுருதி கூறிய கதை பற்றி பேசுகையில், குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட வேண்டியது.
இப்போது கூட குழந்தை திருமணங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. கமிஷனர் வந்து தடுத்தார், எஸ்பி வந்து தடுத்தார் என இந்த காலத்திலும் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
தங்களின் கடமைகளை சீக்கிரம் முடித்து விட வேண்டும் என எண்ணி பெற்றோர்கள் எடுக்கும் அவசர முடிவு இது.
வயது வித்தியாசம் மட்டுமல்ல, இருவருமே குழந்தைகளாக இருக்கும் போது கூட இத்தகைய திருமணங்கள் நடத்தப்படுகின்றன.
இவ்வளவு பேசும் என்னுடைய குடும்பத்திலேயே, என் தாய்- தந்தைக்கும் சிறு வயதிலேயே திருமணம் நடைபெற்றது.
ஆனால் அது நடந்தது 1920 களில். ஆனால் 100 வருடம் கடந்த பிறகு இப்போதும் அது நடப்பது தான் வருத்தத்திற்கு உரியது.
சுருதியின் தாத்தா எடுத்த முடிவால் இரண்டு குழந்தைகளின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஒன்று உங்களின் வாழ்க்கை, மற்றொன்று உங்கள் அம்மாவின் வாழ்க்கை.
அதனால் பக்கத்தில் இது போன்ற குழந்தை திருமணங்கள் நடந்தால், கமிஷனர் வருவார், எஸ்பி வருவார் என்று இருக்காதீர்கள். தெரிந்தவர்கள் என்றால் எடுத்துச் சொல்லுங்கள்.
நெருக்கமானவர்கள் என்றால் தட்டி சொல்லுங்கள் என்றார். இதைத் தொடர்ந்து பாவனியின் கதை பற்றி பேசுகையில், இப்போது தேர்வில் தோல்வி அடைந்ததற்காக கூட மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். வாழ்க்கை எவ்வளவு பெரிய விஷயம்.
நாம் எதிர்கொள்ள வேண்டிய விஷயம். அதற்கு பயந்து தற்கொலை செய்து கொள்வதா. கதை பிடிக்கவில்லை என்றால் கூட நாம் சொல்வது இதை கேட்பதற்கு செத்து விடலாம் என்பது. மரணம் தான் அனைவத்திற்கும் தீர்வு என நமது மனதில் பதிந்து விட்டது.
எனக்கும் கூட 12-13 வயதில் தோன்றியது, நம்மை அங்கிகரிக்காத இந்த உலகில் ஏன் நாம் வாழ வேண்டும் என தோன்றியது.
ஆனால் அப்படி செய்திருந்தால் எத்தனை பாராட்டுக்களை, இந்த மேடை உட்பட எத்தனை புகழை நான் இழந்திருப்பேன்.
மதுமிதா கூறியது நல்ல பாடம். எனக்கும் தான். மனம் விட்டு பேசி விடுங்கள். தற்கொலை எண்ணம் தொலைந்து விடும் என்று கூறுகின்றார் கமல்.