IND VS NZ - இன்றைய வெற்றியுடன் தொடரை கைப்பற்றிய இந்தியா அணி
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டி கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், 3வது மற்றும் கடைசி டி20 போட்டி மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் இன்று நடந்தது.
டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் சேர்த்தது. கேப்டன் ரோகித் சர்மா 56 ரன்கள் விளாசினார். நியூசிலாந்து தரப்பில் மிட்செல் சான்ட்னர் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் துவக்க வீரர் மார்ட்டின் குப்தில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், மறுமுனையில் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகள் சரிந்தன. குறிப்பாக அக்சர் படேலின் பந்துகளை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறினர்.
டேரில் மிட்செல் 5 ரன்களிலும், மார்க் சாம்பன், பிலிப்ஸ் இருவரும் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். 30 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நியூசிலாந்து அணி, சற்று நிதானமாக ஆடியது. அரை சதம் கடந்த குப்தில் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. இதனால் நியூசிலாந்து அணி 17.2 ஓவர்களில் 111 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியா 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அக்சர் படேல் 3 விக்கெட்டுகளும், ஹர்ஷல் படேல் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி 3-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றி உள்ளது.