உலகின் பெரும்பாலான நாடுகளில் ஒமிக்ரான் பரவிவிட்டது! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
கவலைக்குரியதாக வகைப்படுத்தப்பட்டுள்ள ஒமிக்ரான் கொரோனா புதிய உருத்திரிபு வைரஸ் உலகின் பெரும்பாலான நாடுகளில் ஏற்கனவே பரவி விட்டதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
இதுவரை உலகம் முழுவதும் 77 நாடுகளில் உரு திரிபு ஒமிக்ரோன் வைரஸ் பரவியுள்ளமை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், அதற்கு மேல் உலகெங்கும் பெரும்பாலான நாடுகளில் இந்த வைரஸ் பரவி விட்டது. எனினும் அது கண்டறியப்பட்டு, உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என ஜெனீவாவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஒமிக்ரான் திரிபின் தாக்கங்கள் குறித்து குறைத்து மதிப்பிடப்படுவதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.
ஒமிக்ரான் லேசான நோயறிகுறிகளை வெளிப்படுத்தினாலும் இதனால் தொற்று பரவல் உலகெங்கும் வேகமடைகிறது. இது சுகாதார அமைப்புகள் மீது அதிக தாக்கத்தை செலுத்தி, அவற்றின் பராமரிப்பு திறனை இழக்கச் செய்யக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஓமிக்ரான் உருத்திரிபு முதன்முதலில் தென்னாப்பிரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் அடையாளம் காணப்பட்டது. அதன் பின்னர் தென் ஆப்பிரிக்கா முழுவதும் தொற்று நோய் வேகமாக அதிகரித்து வருகிறது. தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளார். லேசான அறிகுறிகளுடன் அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
ஓமிக்ரான் திரிபு பரவல் கண்டறியப்பட்டதை அடுத்து தென்னாப்பிரிக்கா மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு பல்வேறு நாடுகள் பயணத் தடைகளை விதித்தன. எனினும் தற்போது உலகெங்கும் பெரும்பாலான நாடுகளில் ஒமிக்ரான் வேகமாகப் பரவி வருகிறது.
இந்நிலையில் முன்னர் பரவிய ஏனைய அனைத்து கொரோனாத் திரிபுகளையும் விட ஒமிக்ரோன் மிக வேகமாகப் பரவுகிறது என அவர் தெரிவித்தார்.
இதேவேளை, ஒமிக்ரான் ஆபத்தானவையாக சிவப்பு பட்டியலில் இணைக்கப்பட்ட 11 நாடுகளையும் அந்தப் பட்டியலில் இருந்து நீக்கவுள்ளதாக இங்கிலாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.
புதிய திரிபு இங்கிலாந்திலும் மிக வேகமாகப் பரவி வருவதால் நாடுகளுக்கான தடையை பேண வேண்டிய தேவை இல்லை என இங்கிலாந்து சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் நேற்று அறிவித்தார்.
ஒமிக்ரான் புதிய திரிபு பரவல் குறித்த கவலைகளுக்கு மத்தியில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடுமையாக்கிய பல ஐரோப்பிய நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்றாகும்.
ஒமிக்ரோன் பரவல் தொடர்பான கவலைகளை அடுத்து செல்வந்த நாடுகள் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்துவதில் அதிக கவனம் செலுத்துவதால் ஏழை நாடுகள் தடுப்பூசிகளை பெறுவதில் சிக்கல் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். ஏழை நாடுகளில் பெரும்பாலன மக்கள் இன்னும் ஒரு தடுப்பூசியை கூடப் பெறவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.