உலகின் மிக நீண்ட ரயில் பயணம் - போர்ச்சுகல் முதல் சிங்கப்பூர் வரை

Prasu
2 years ago
உலகின் மிக நீண்ட ரயில் பயணம் - போர்ச்சுகல் முதல் சிங்கப்பூர் வரை

போர்ச்சுகல் முதல் சிங்கப்பூர் வரை ரயிலிலேயே பயணம் செய்யும் சாத்தியம் உருவாகியுள்ளது.

இதுவே உலகின் ஆக நீண்ட தொடர் ரயில் பயணமாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.இந்த ரயில் பாதை 18,755 கிலோமீட்டர்  நீளமானதாக இருக்கும்.போர்ச்சுகலிலிருந்து சிங்கப்பூர் வரை செல்ல 21 நாள்கள் பிடிக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.  

போர்ச்சுகலின் தெற்கில் உள்ள லாகோசில் தொடங்கி, பாரிஸ், மாஸ்கோ, பெய்ஜிங், வியென்டியென்,  பேங்காக் என பல இடங்களைக் கடந்து சிங்கப்பூரை அடையலாம். லாவோசில் தொடங்கப்பட்டுள்ள புதிய ரயில் பாதை இந்த நீண்ட பயணத்தைச் சாத்தியமாக்கியுள்ளது. 

முன்னதாக உலகின் ஆக நீளமான ரயில் பயணம், போர்ச்சுகலில் தொடங்கி வியட்னாம் சாய்கோன் நகரில் முடிந்திருக்கும்.இதன் நீளம் 16,898 கிலோமீட்டர் ஆகியிருக்கும். 

ஆனால் டிசம்பர் 2ஆம் தேதி, சீனாவில் உள்ள குன்மிங் நகரிலிருந்து லாவோசின் வியன்டியன் நகருக்கு அதிகவேக ரயில் சேவை தொடங்கப்பட்டது. 

அதன்வழி பயணப் பாதை, வியன்டியன், பேங்காக், மலேசியா, சிங்கப்பூர் என நீள்கிறது. இந்த உத்தேச ரயில் பயணப் பாதை 13 நாடுகளைக் கடக்கிறது. இதற்கு ஆகக்கூடிய செலவு 1,200 யூரோக்கள், அதாவது சுமார் 1,850 சிங்கப்பூர் வெள்ளியாகும்.    

சீட்61.காம் (seat61.com) எனும் இணையத்தளத்தைச் சேர்ந்த மார்க் ஸ்மித் எனும் ரயில்  நிபுணரின் உதவியுடன் ரெடிட் தளத்தைப் பயன்படுத்துவோர் இதைக் கணக்கிட்டுத் தெரிவித்துள்ளனர்.    

ஆனால் கொவிட்-19 கட்டுப்பாடுகளால் ரயில் பாதையின் சில பகுதிகள் தற்போது இயங்கவில்லை என்று அவர்கள் கூறினர்.