கேஸ் பிரச்சினை தொடர்பில் மக்களுக்கு உடனடியாக பதில் வழங்க வேண்டு-ஜோன்ஸ்டன பெர்ணான்டோ

Prabha Praneetha
2 years ago
கேஸ் பிரச்சினை தொடர்பில் மக்களுக்கு உடனடியாக பதில் வழங்க வேண்டு-ஜோன்ஸ்டன பெர்ணான்டோ

கொழும்பு- ஹொரணை வீதியில் 9/2 இலக்க வெரஹர பாலம் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நெடுஞ்சாலை அமைச்சரும் ஆளும் தரப்பு பிரதம கொறடாவுமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ மற்றும் அமைச்சர் காமினி லொகுகே ஆகியோரின் தலைமையில் வெரஹரவில் நடைபெற்றது.

வெரஹர பாலம் நிர்மாணிப்பதற்காக 285 மில்லியன் ரூபா செலவிடப்படுகிறது. 43.3 மீட்டர்கள் வரை பாலம் விஸ்தரிக்கப்படுவதோடு 22 மீட்டர் அகலமும் 4 வழிப்பாதையும் கொண்டதாக இது நிர்மாணிக்கப்படும்.

15 மாதங்களில் நிர்மாணப்பணிகள் நிறைவடைய இருப்பதோடு இந்தப் பாலம் நிர்மாணிக்கப்படுவதோடு பொரலஸ்கமுவ வௌ்ள அச்சுறுத்தல் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விழாவின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஜோன்ஸ்டன பெர்ணான்டோ,


"கேஸ் பிரச்சினை தொடர்பில் கேஸ் நிறுவன தலைவர்களும் அதிகாரிகளும் மக்களுக்கு உடனடியாக பதில் வழங்க வேண்டும். தலைவர்களை தொலைபேசியூடாக கூட தொடர்பு கொள்ள முடியாதிருப்பதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன்.

மறைந்திருக்க வேண்டிய தேவை கிடையாது. அரசாங்கத்தை அபகீர்த்திக்குட்படுத்தாமல் மக்களுக்கு பதில் வழங்க வேண்டும். அத்தோடு இந்த கேஸ் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும். ஒரு கம்பனி தலைவர் ஊழல் மோசடி பற்றி பேசுவதை கண்டேன்.

ஆனால் கேஸ் பிரச்சினை வரும் போது தலைமறைவாகிறார். மறைந்திருப்பதற்காக ஜனாதிபதி அவருக்கு பதவி வழங்கவில்லை. பிரச்சினைகள் இல்லாத போது கருத்துக் கூறுவதை விடுத்து அரசாங்கத்தை அபகீர்த்திக்குள்ளாக்காமல் பிரச்சினைகளை மட்டுப்படுத்துவதற்கான தீர்வுகளை வழங்க வேண்டும்" என்றார்.