கிளிநொச்சியில் கிட்டத்தட்ட 2 லட்சம் தோட்டாக்கள் கண்டுபிடிப்பு

#Kilinochchi #Police
Prathees
2 years ago
கிளிநொச்சியில் கிட்டத்தட்ட 2 லட்சம் தோட்டாக்கள் கண்டுபிடிப்பு

கிளிநொச்சி, கோரக்கன்கட்டு பகுதியில்  புதைக்கப்பட்டிருந்த  T-56 தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் அகழ்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

குறித்த பகுதியில் இருந்து  T-56 ரவைகள் 187,559 மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

மூன்றாவது நாளாக நேற்று (16)  இடம்பெற்ற அகழ்வுப் பணிகள் நிறைவடைந்தன.

குறித்தஅகழ்வுப்பணிகளின்போது அந்த இடத்தில் 187,559 T-56 ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், MGMG ரவைகள் 2400  மற்றும் எம்16 ரவைகள் 800 உம் மீட்கப்பட்டதாக அகழ்வுப் பணிகளுக்கு உதவிய கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

அகழ்வாராய்ச்சியில், 145 பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஒரு பெட்டியில் 750 T-56 ரவைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. பெட்டிகளில் இருந்து மொத்தம் 108,750 தோட்டாக்கள் மீட்கப்பட்டதாகவும், மேலும் 78,809  ரவைகள் பெட்டிக்கு வெளியே புதைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த 13ஆம் திகதி கட்டுமானப் பணிக்காக  நில உரிமையாளர் நிலத்தை வெட்டும்போது அங்கு வெடிமருந்து பெட்டி கண்டெடுக்கப்பட்டதை அடுத்து பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்தில் இருந்து 1500 T-56 ரவைகள் மீட்கப்பட்டன.

குறித்த இடத்தில் மேலதிக அகழ்வுப் பணிகளுக்காக கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்த பொலிஸார், நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் கடந்த 15ஆம் மற்றும் 16ஆம் திகதிகளில் குறித்த இடத்தில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

யுத்த காலத்தில் புலிகள் அந்த இடத்தில் வெடிபொருட்களைப்  புதைத்திருக்கலாம் எனவும்  நீதிமன்ற உத்தரவின் பேரில் கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப்படையை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.