மரணத்தில் சந்தேகம்: கொழும்பு - கதிர்காமம் பிரதான வீதியை  மறித்து ஆர்ப்பாட்டம்

#Protest
Prathees
2 years ago
மரணத்தில் சந்தேகம்: கொழும்பு - கதிர்காமம் பிரதான வீதியை  மறித்து ஆர்ப்பாட்டம்

மதுபானம் விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் இன்று (18) ஹுங்கம பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று கொழும்பு - கதிர்காமம் பிரதான வீதியை ரன்ன பிரதேசத்தில் மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எவ்வாறாயினும், சிசிடிவி காட்சிகளில் அறையில் இருந்த சந்தேக நபர் தரையில் விழுந்ததைக் காட்டியது. இந்த காட்சிகள் இன்று பிற்பகல் ஊடகங்களில் வெளியாகின.

போயா தினத்தில் மதுபானம் விற்ற குற்றச்சாட்டில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பிரேமதிலக்க அமரவீர (62) ஹுங்கம பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஹுங்கம பொலிஸாருக்கு அழைத்து வரப்பட்ட சிறிது நேரத்திலேயே அறையில் விழுந்துள்ளார்.

சந்தேக நபர் ரன்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்

எனினும் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் வைத்தியசாலை வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் கொழும்பு - கதிர்காமம் பிரதான வீதியை ரன்ன பகுதியிலிருந்து மறித்து போராட்டத்தை ஆரம்பித்தனர்.

அங்குனுகொலபெலஸ்ஸ நீதவான் இன்று பிற்பகல் ரன்ன அரச வைத்தியசாலையில் உயிரிழந்தவரின் சடலத்தின் பிரேதப் பரிசோதனையை மேற்கொண்டார்.

சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர, ரன்ன அரசாங்க வைத்தியசாலைக்கு விஜயம் செய்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு மாற்றியுள்ளார்.