ஜனவரி-1 முதல் கட்டாயமாக்கப்படும் கொவிட் தடுப்பூசி அட்டைகள்

#Covid Vaccine #Covid 19
Prathees
2 years ago
ஜனவரி-1 முதல்  கட்டாயமாக்கப்படும் கொவிட் தடுப்பூசி அட்டைகள்

ஜனவரி 01 ஆம் திகதி முதல் பொது இடங்களுக்கு பிரவேசிக்கும் போது கொவிட் தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கம்பஹா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கம்பஹா மாவட்ட கொவிட் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்தில் தேவையான கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொள்வது சகல பிரஜைகளின் பொறுப்பாகும் எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் இதுவரை 15,964,289 பேர் தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்றுள்ளனர்.

இரண்டு டோஸ் பெற்றவர்களின் எண்ணிக்கை 13,803,820.

கம்பஹா மாவட்டத்தில் இதுவரை 1,554,292 பேருக்கு இரண்டு மருந்துகளும் வழங்கப்பட்டுள்ளன.

கம்பஹா மாவட்டத்தில் தற்போது பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருவதாகவும்,ஆனால் பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

கம்பஹா மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி நிறுவனங்கள் பூஸ்டர் தடுப்பூசியைப் பெறுவதற்கு பொதுமக்களை ஊக்குவிக்கும் வகையில், பிரதேச செயலகங்கள்இ சுகாதார வைத்திய அதிகாரிகளின் கூட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.

கம்பஹா மாவட்டத்தில் பூஸ்டர் தடுப்பூசியை டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் மேலும் பணிப்புரை விடுத்தார்.

மக்கள் தற்போது கோவிட் தொற்றுநோயை மறந்துவிட்டதாகவும், அதனால் சுகாதார வழிகாட்டுதல்களை புறக்கணிப்பதாகவும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இது தொடர்பாகவும் மக்கள் விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.