சீனா மட்டுமல்ல எந்த நாடும் தமிழருக்குத் தீர்வு வழங்காது! - சம்பந்தனின் கருத்துக்கு பீரிஸ் பதில்

#G. L. Peiris
Prasu
2 years ago
சீனா மட்டுமல்ல எந்த நாடும் தமிழருக்குத் தீர்வு வழங்காது! - சம்பந்தனின் கருத்துக்கு பீரிஸ் பதில்

"சீனா மாத்திரமல்ல எந்த நாடும் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்காது. வெளிநாடுகள் தீர்வு வழங்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கனவு காணக்கூடாது."

- இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

'போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் அரசியல் தீர்வு குறித்து முன்னேற்றகரமான கருத்துக்களையே எதிர்பார்க்கின்றனர். ஆனால், சீனா இது தொடர்பில் இதுவரை அக்கறை செலுத்தவில்லை' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருந்தார். இலங்கைக்கான சீனத் தூதுவர் ட்சீ சென்ஹோங் தலைமையிலான குழுவினர் வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு கடந்த சில தினங்களாகப் பயணம் மேற்கொண்டிருந்தனர். இந்தப் பயணம் தொடர்பில் சம்பந்தன் கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறியிருந்தார்.

சம்பந்தனின் இந்தக் கருத்து தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸிடம் ஊடகங்கள் வினவியபோது,

"இலங்கை இறையாண்மையுள்ள நாடு. இறையாண்மையுள்ள நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடும் அதிகாரம் வெளிநாடுகளுக்கு இல்லை. அந்தவகையில், இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகள் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கனவு காணக்கூடாது. சீனா மாத்திரமல்ல எந்த நாடும் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்காது. எமது அரசு தீர்வை வழங்கத் தயாராகவுள்ளது. ஆனால், அதைப் புறக்கணிக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் நடவடிக்கைகள் உள்ளன" - என்று பதிலளித்தார்