இன்றைய வேத வசனம் 20.12.2021

#Prayer
Prathees
2 years ago
இன்றைய வேத வசனம் 20.12.2021

(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை  கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)

நாம் இருவர் நமக்கு ஒருவர் என்ற கான்செப்டில் ஒரு பட்டாளத்து மனிதர்.
கண்ணே கண்ணு என்னுடைய செல்லக்கண்ணு என்று தங்க தட்டில் அன்னம் ஊட்டி வளர்த்த அந்த செல்ல கண்ணுதான் அந்த ஒரே மகன்.

அவனுக்கு கிரிக்கெட் என்றால் அவ்வளவுதான் விடிய விடிய T.V க்கு முன்பாக உட்கார்ந்திருப்பான். T.V க்கு கண் இருந்தா அதுவும் அழுதுவிடும். 

எப்பொழுது பார்த்தாலும் கையில் பந்தும் மட்டையுமாக தான் அலைவான். ஒரு நாள் விளையாட்டில் நண்பருக்குள் ஏற்பட்ட பிரச்சனை வினையாய் மாறியது. மட்டையால் தாக்கப்பட்டான். உயிருக்கு போராடுகிற சூழ்நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.

தன் ஒரே மகனை பார்க்க ஓடோடி வந்த தகப்பன் ரத்தக்கண்ணீர் வடித்தார். மருத்துவர் தாழ்ந்த குரலில் பையன்….உயிர்…. முடிந்துவிட்டது என்றார். 

அவ்வளவுதான் அங்கே ஒரே மரண ஓலம்.. துக்கம் விசாரிக்க வந்தவர்கள், அந்த நொள்ளக் கண்ணனை சும்மா விடக்கூடாது ஒரு கை பார்த்துவிடவேண்டும் என்று புலம்ப ஆரம்பித்தனர். 

பிள்ளையை வளர்க்க தெரியாத அவனுடைய அப்பனையும் அம்மையும் உள்ளே கொண்டு போட்டு நைய்ய புடைக்க சொல்லுங்க என்றும் சொன்னார்கள்.

ஒருவேளை நானும் நீங்களும் இந்த இடத்திலிருப்போமானால் என்ன நடந்திருக்கும்! கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

ஆனால் பட்டாளத்துக்காரர் ஒன்றை யோசித்தார். பிள்ளையை இழந்த எனக்கு அந்த மகனை எந்த நீதிமன்றமும் எனக்கு திருப்பிதரமுடியாது. வேறு எந்த கொள்கையும் ஒத்துவராது என்பதை நிதானித்தார்.

உலகத்தை இரட்சிக்க வந்த இரட்சகரை அன்று சிலுவையில் அறையும்போது, அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். லூக்-23:34 

நாம் ஏன் இந்த காரியத்தை மன்னிக்ககூடாது? என்று விரைந்து சிறைச்சாலைக்கு நடக்கலாயினார்.
அவனை பார்க்க விண்ணப்பித்து அங்கே காத்திருந்தார். அங்கே அந்த இளைஞன் குறுந்தாடியுடன் முகத்தில் சொல்லொண்ணா துக்கத்துடன் யார் என்று பார்க்க கம்பிவலைக்கு அந்த பக்கம் நின்று கொண்டிருந்தான். 

பட்டாளத்துக்காரர் அருகில் சென்றார். அவன் இவருடைய முகத்தை பார்க்கமுடியாமல் கண்ணிலிருந்து கண்ணீர் சொட்டிக்கொண்டிருந்தது.

பட்டாளத்துக்காரர் அவனைப்பார்த்து மகனே என்று அழைத்தார். அந்த அழைப்பின் சத்தம் மீண்டும் அவனை அழ வைத்தது. நீ செய்த தவறை நான் மன்னிக்கிறேன் என்றார்.

ஒரு பெரிய பாரம் அவனிடமிருந்து நீங்குவதை பார்த்தான். அதோடு கூட அவர் நான் உன்னை என்னுடைய மகனாக ஏற்றுக்கொள்கிறேன் என்றார்.

அவரை கட்டி தழுவ ஆசையோடு கையை எடுத்தான். முடியவில்லை. அப்பொழுதுதான்  அவனுக்கு முன்பாக இருந்த கம்பி வலையை பார்த்தான்.

அவர் அவனுடைய தண்டனை காலம் முடியும் வரை காத்திருந்து, அவனைத் தன் மகனாக ஏற்றுக்கொண்டு அவருடைய சுதந்திரத்தையும் ஆசீர்வாதத்தையும் அவனுக்கு கொடுத்தார்.

அருமையானவர்களே, மன்னிப்பு ஒரு அருமையான குணம். நானும்  நீங்களும் சேற்றிலிருக்கும்பொழுது நம்மை அழைத்து மன்னித்து கன்மலைமேல் நிறுத்தின ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நினைத்து பார்த்து நன்றி செலுத்துங்கள்.

அதோடு எத்தனையோ பேரை நீங்கள் பகைத்தும் சண்டைபோட்டும் இருக்கலாம். அவர்களை மன்னித்து சிநேகியுங்கள். தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!

எனக்குச் செவிகொடுக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்யுங்கள். (லூக்கா 6:27)

ஆமென்!