இந்தியக் கடற்றொழிலாளர்கள் யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும்- டக்ளஸ்

Prabha Praneetha
2 years ago
இந்தியக் கடற்றொழிலாளர்கள் யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும்- டக்ளஸ்

கடந்த கால அழிவு யுத்தத்தினால் அனைத்தையும் இழந்த வடக்கு கடற்றொழிலாளர்களை மீண்டும் மீண்டும் துன்பப்படுத்தும் செயற்பாடுகளை கடற்றொழிலில் ஈடுபடுகின்ற தமிழக உறவுகள் நிறுத்த வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்துக்கொண்டிருந்த 6 மீன் பிடிப் படகுகளை நேற்று அதிகாலை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியிருந்த நிலையில், 43 இந்தியக் கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள அவர், “இந்தியக் கடற்றொழிலாளர்களினால் கடல் வளங்கள் எந்தளவிற்கு அநியாயமாக அழிக்கப்படுகின்றன என்பதற்கு, இன்று கைது செய்யப்பட்ட 6 இந்திய மீன்பிடிப் படகுகளில் இருந்தும் கைப்பற்றப்பட்ட பல மெற்றிக்தொன் மீன் குஞ்சுகளே சாட்சிகளாக இருக்கின்றன.

இவ்வாறு பெருந்தொகையான மீன்வளம் யாருக்கும் பயனற்ற முறையில் நாள்தோறும் அழிக்கப்படுகின்றன.

அதுமாத்திரமன்றி, எமது கடற்றொழிலாளர்களின் வலைகளையும் நாள்தோறும் இந்திய மீன்பிடிக் கலன்கள் அறுத்து நாசம் செய்து கொண்டிருக்கின்றன.

இதனால் எமது கடற்றொழிலாளர்கள் வாழ்வாதார பிரச்சினைகளை எதிர்கொள்வதோடு எமது கடல் வளமும் நாசமாக்கப்படுகின்றது.

சட்டவிரோத தொழில் முறையான இழுவை வலை தொழில் முறையைப் பயன்படுத்துவதனால் பாக்கு நீரிணை மற்றும் மன்னார் விரிகுடாப் பிரதேசத்தில் கடல் வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கான சூழல் அழிக்கப்படுகின்றது.

இதனால் இலங்கை கடற்றொழிலாளர்கள் மாத்திரமன்றி இந்தியக் கடற்றொழிலாளர்களின் எதிர்காலச் சந்ததிக்கும் வாழ்வாதாரமான கடல் வளம் இல்லாத சூழல் உருவாக்கப்படுகின்றது.

அதேவேளை, இந்த எல்லை தாண்டிய சட்ட விரோத தொழில் செயற்பாடுகளுக்கு எதிராக இலங்கை கடற்படையினர் மேற்கொள்ளுகின்ற சட்ட ரீதியான நடவடிக்கை காரணமாக, அப்பாவி தமிழக கடற்றொழிலாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையும் ஏற்படுகின்றது.

எனவே, இந்தியக் கடற்றொழிலாளர்கள் யதார்த்தத்தினைப் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும். தடை செய்யப்பட்ட தொழில் முறைகளை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

அத்துடன் சிறந்த வருமானத்தை பெற்றுத்தரக்கூடிய ஆழ்கடல் கடல் தொழிலில் ஆர்வத்தை செலுத்தி நிலைபேறான எதிர்காலத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்பதே எனது வேண்டுகோளாகும்” என்று தெரிவித்துள்ளார்.